Thursday 26 December 2013

அப்துல் நாசர் மதானி - அதிகாரத்தின் இரை!

ந்திய தேசத்தின் விடுதலைக்காக, தன் தேகத்தையே அர்பணித்த காந்தியடிகள் கொடூரமாக கொல்லப்பட்ட நிகழ்வுதான, விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பயங்கரவாத நிகழ்வு. மூச்சுக்கு ஒரு முறை ''ஹே ராம்'' என்று உச்சரித்து, கடைசி வரை தீவிர இந்து மதப் பற்றாளராக வாழ்ந்த காந்தியடிகளை கொன்றொழித்த பயங்கரவாதத்தை செய்தது முஸ்லிம்கள் அல்ல.. ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!
பன்மைத் தன்மை உடைய இந்தியத் திருநாட்டில், சமயச்சார்பின்மை என்னும் தத்துவம் தளைக்க தன் இறுதி மூச்சு உள்ள வரைப் போராடிய ஜவஹர்லால் நேருவின், அரசியல் வாரிசான இந்திரா காந்தியை சுட்டுப் பொசுக்கிய பயங்கரவாதத்தில் முஸ்லிம்களுக்குத் தொடர்பில்லை., ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

இந்திரா காந்தியின் அருமைப் புதல்வரும், இந்தியாவின் இளம் பிரதமருமான ராஜீவ் காந்தியை சிதறடித்த பயங்கரவாதத்திலும் முஸ்லிம்களுக்கு சம்மந்தமில்லை. ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

இந்துக்களின், கிறிஸ்தவர்களின், சீக்கியர்களின், பௌத்தர்களின் இன்ன பிற சமூகங்களின் வழிபாட்டுத் தலங்களையோ, வரலாற்றுச் சின்னங்களையோ, இடித்துத் தகர்த்த பயங்கரவாதத்தை, இந்தியாவின் எந்த ஒரு மூலையிலும் எந்த ஒரு முஸ்லிமும் செய்ததில்லை., ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

சுதந்திர இந்தியாவில் நடை பெற்ற மிகப்பெரும் வகுப்புக் கலவரங்கள், இனப்படுகொலைகள் எல்லாவற்றிலும் உயிரை இழந்து, உடைமை இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாய் அல்லல்பட்டபோதும், உணர்வை இழக்காமல் உரிமை கேட்டதனால்., முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

இரத்தமும் சதையுமாக இந்திய மண்ணை நேசித்த முஸ்லிம்களின், இரத்தம் குடித்து தன் சதை வளர்க்கும் இழி செயலை, இந்தியாவின் அதிகார வர்க்கமும், ஊடகங்களும் வெளிப்படையாக செய்து வருகின்றன. முஸ்லிம்களை குதறுவதையே முழு நேர செயல் திட்டமாகக் கொண்டு இயங்கும் இந்துத்துவ சக்திகளுக்கு, ஜனநாயகத்தின் அத்தனைத் தூண்களும் அரணாய் நிற்கின்றன. நாடு முழுவதும் தொடரும் இந்த அக்கிரமத்திற்கு இரையாகிப் போன இரத்த சாட்சியாக இப்போது பெங்களூர் சிறைக் கொட்டடியில் அடைபட்டுக் கிடக்கிறார் அப்துல் நாசர் மதானி.
நாம் வாழும் காலத்தில், நம் கண் முன்னாலேயே ஒரு மிகப்பெரும் அக்கிரமம் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. சட்டம் அதன் கயமையைச் செய்கிறது. நீதிக்கு கல்லறை கட்டப்படுகிறது, எளிய மனிதர்களைச் சூறையாடும் அரச பயங்கரவாதம் தலை விரித்தாடுகிறது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இருபது சதவீதத்துக்கும் அதிகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் எழுச்சிக்காகவும், மறு மலர்ச்சிக்காகவும் போராடிய ஒற்றைக் காரணத்திற்காக ஒரு அப்பாவி மனிதரை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றன இந்தியாவின் அரசுகள்.

சட்டம், நீதி, ஜனநாயகம், இறையாண்மை என்றெல்லாம் வாய்கிழியப் பேசப்படுகின்ற ஒரு மண்ணில், அப்பட்டமாக மீறப் படுகின்றன மனித உரிமைகள். மாந்த நேயத்திற்கான அத்தனை இலக்கணங்களும் குழி தோண்டிப் புதைக்கப் படுகின்றன. ஜனநாயகத்தின் தூண்கள் அனைத்தும் ஈரமற்றப் பாறையாய் மாறி வருகின்றன. இதற்குப் பிறகும் சட்டம் பற்றியும், நீதி பற்றியும், ஜனநாயகத்தின் மாண்பைப் பற்றியும் பிதற்றுபவர்களை காணும்போது கடும் எரிச்சலும், கோபமும் தான் வருகிறது.
1992 டிசம்பர் 6 - இல் பாபர் மஸ்ஜிதை இடித்தார்கள். 450 ஆண்டு கால வரலாற்றுச் சின்னத்தை, முஸ்லிம்களின் புனிதமிக்க வழிபாட்டுத் தலத்தை அநீதியான முறையில் தகர்த்து எறிந்தார்கள். எப்படியாவது தங்களின் பள்ளிவாசல் காப்பாற்றப்பட்டு விடும் என்று கடைசி வரை நம்பியிருந்த முஸ்லிம்கள் கருவறுக்கப்பட்டார்கள். இந்த நாட்டின் மதிப்பு மிகுந்த நீதிமன்றத்தையும், ராணுவத்தையும், போலீசையும், ஓட்டுப் பொறுக்கி அரசியல் வாதிகளையும் நம்பி, நம்பி ஏமாந்து போனது முஸ்லிம் சமூகம்.

அவநம்பிக்கை மிகுந்த நிலையில், தமது இருப்பு குறித்த பாதுகாப்பின்மையும், எதிர்காலம் குறித்த அச்சமும் முஸ்லிம்களை வாட்டத் தொடங்கியது. தமக்கான பாதுகாப்பை தாமே உறுதி செய்து கொள்ளும் வகையில் முஸ்லிம் சமூகத்தின் உள்ளிருந்து உரிமைக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. அப்படி நாடு முழுவதும், ஜனநாயகப் பாதையில் நின்று உரிமை கேட்பதற்காக வெடித்து முளைத்த விதைகளில் ஒருவர்தான் அப்துல் நாசர் மதானி.
அடக்குமுறைகளுக்கு எதிரான கர்ஜனை, எவருக்கும் எதற்கும் அடங்காத கம்பீரம், நெருப்பை உமிழும் உரை வீச்சு, சமுதாய மறுமலர்ச்சியே உயிர் மூச்சு என்று தனிப்பெரும் அடையாளத்துடன் கேரள அரசியல் வானில் வலம் வந்தவர் அவர். அதிகாரத்தை நோக்கிய உண்மையின் குரலாக, ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலாக ஓங்கி ஒலித்தவர் அவர். கொள்கைச் சமரசமற்ற அவரது அரசியல் நிலைப்பாடுகளும், இந்துத்துவ எதிர்ப்பில் அவர் காட்டிய உறுதிப்பாடும்தான் அவரை இன்று இந்த நிலைக்குத் தள்ளி இருக்கிறது.
கேரளாவின் கொல்லம் மாவட்டம் சாஸ்தான் கோட்டையைச் சார்ந்த அப்துஸ் சமத் மாஸ்டர், அஸ்மா பீவி தம்பதியருக்கு 1965 ஜனவரி 18 - இல், மூத்த மகனாக பிறந்தார் மதானி. பள்ளித் தலைமை ஆசிரியரான மதானியின் தந்தை, அவரை மார்க்க அறிவும் நல்லொழுக்கமும் உடைய பிள்ளையாக வளர்த்து எடுத்தார். பள்ளிக் கல்விக்குப் பின் கொல்லத்தில் உள்ள 'மஅதனுல் உலூம்' அரபிக் கல்லூரியில் இணைந்து இஸ்லாமிய மார்க்க அறிஞராக பரிணாமம் பெற்றார் மதானி. அந்தக் கல்லூரியில் வழங்கப்பட்ட 'மஅதனி' என்ற பட்டமே பின்னாளில் அவரது அடையாளத்துக்குரிய பெயராக மாறிப் போனது.
இளம் மார்க்கப் பிரச்சாரகராக தன் பயணத்தைத் தொடங்கிய மதானி, அனல் பறக்கும் உரை வீச்சுக்களால் அனைவரையும் ஈர்த்தார். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலை மோதியது. கேரளாவின் சொற்பொழிவு மேடைகளில் தவிர்க்க முடியாத தனிப்பெரும் பேச்சாளர் ஆனார் மதானி. 1990 களில் இந்திய அளவில் நடைபெற்ற பல்வேறு அரசியல் நிகழ்வுகள் மதானியைப் பாதித்தது. மண்டல் கமிசன் அறிக்கைக்கு நேர்ந்த கதியும், அத்வானியின் தலைமையில் அரங்கேறிய இந்துத்துவ எழுச்சியும், முஸ்லிம்களை அச்சுறுத்தும் ஆர். எஸ்.எஸ் கும்பலின் தீவிரவாத நடவடிக்கையும் கண்டு கொதித்து எழுந்தார் மதானி.

ஆர்.எஸ்.எஸ்.க்கு அரசியல் தளத்தில் நின்று பதிலடி கொடுக்க ஐ.எஸ்.எஸ். [இஸ்லாமிக் சேவா சங்] என்ற அமைப்பை, 1990 ஆம் ஆண்டு தொடங்கினார். 1992 டிசம்பர் 6 - இல் பாபர் மஸ்ஜித் இடிக்கப் பட்டபோது மதானியின் ஐ.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் இந்திய அரசின் இத்தகைய நடவடிக்கையைக் கண்டித்து சூறாவளியாய் சுழன்றார் மதானி. பாபர் மஸ்ஜிதை இடித்த பயங்கரவாதிகளையும், அதற்குத் துணை நின்ற காங்கிரசையும் நெருப்பு உரைகளால் காய்ச்சி எடுத்தார்.

மதானியின் உரை வீச்சில் பொசுங்கிப்போன இந்துத்துவ சக்திகள், அவரை நேர்மையாக எதிர்கொள்ள முடியாமல் தீர்த்துக்கட்டும் சதியில் இறங்கினர். ஆதரவற்ற அனாதைக் குழந்தைகளை அரவணைக்கும் வகையில் அன்வார்சேரியில் மதானி உருவாக்கிய ஜாமியா அன்வார் என்னும் கலாசாலையில் இருந்து இரவு அவர் வெளியே வரும்போது, ஆர். எஸ்.எஸ் கும்பல் அவர் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியது. 1992 இல் நடைபெற்ற அந்த தாக்குதலில் தனது ஒற்றைக் காலை இழந்து ஊனமுற்ற மதானி, அதன் பின்னர் சக்கர நாற்காலியில் தவழ்ந்து கொண்டே சரித்திரம் படைத்தார்.

இந்தியச் சூழலில் முஸ்லிம்கள் தனித்து நின்று போராடுவதன் மூலம் இலக்கை அடைய முடியாது என்ற உண்மையை உணrந்து தெளிந்த மதானி, 1993 இல் மக்கள் ஜனநாயகக் கட்சி [PDP] என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். தாழ்த்தப்பட்ட தலித் மக்களும், ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களும் ஓரணியில் ஒன்றிணைந்து அரசியல் சக்தியாக எழுச்சி பெறும் வியூகத்தை வகுத்தார். தலித் சமூகத்தை சார்ந்த ஒருவரை கேரளாவின் முதலமைச்சராக மாற்றியே தீருவேன் என்று சூளுரைத்தார். குருவாயூர், ஒற்றப்பாலம், திரூரங்காடி இடைத்தேர்தல்களில் போட்டியிட்டு கேரளாவின் mainstream அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்தார்.

முஸ்லிம்களோடு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களையும் அணி திரட்டும் மதானியின் தொலை நோக்குப் பார்வையைக் கண்டு கேரளாவின் அரசியல் கட்சிகளுக்கு நடுக்கம் வந்தது. அரசியல் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திக் கொண்டு முன்னேறிக் கொண்டிருந்த மதானி 1998 மார்ச் 31 - அன்றுகோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

மதானி கோவை சிறையில் இருந்தபோது அவர் அனுபவித்த ரணங்கள் வார்த்தைகளில் அடங்காதவை. விசாரணைக் கைதியாக சிறையில் பூட்டப்பட்டு கசக்கி எறியப்பட்டார். 105 கிலோ எடை கொண்ட கனத்த தேகத்துடன், 33 வயதே நிரம்பிய துடிப்பு மிக்க இளைஞராக சிறைக்குச் சென்ற அவர் அதிகாரத்தின் கொடும் பசிக்கு இரையானார். நாளாக நாளாக அவரது உடல் எடை குறைந்து இறுதியில் 45 கிலோ ஆனது. உலகத்தில் உள்ள அத்தனை வியாதிகளும் குடியிருக்கும் நோய்களின் கூடாரமாக மாறி அவரது உடல் நலியுற்றது. ஒரு விசாரணைக் கைதிக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச உரிமைகள் கூட மதானிக்கு மறுக்கப்பட்டன.

1200 க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டு ஒருவர்கூட அவருக்கு எதிராக சாட்சி சொல்லாத நிலையிலும் அவரது ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டன. அவரது பாட்டி இறந்தபோது பரோலில் சென்று பாட்டியின் உடலை பார்த்து வருவதற்கு கூட அவருக்கு அனுமதி தரப்படவில்லை. நீண்ட நாள் ஆகிவிட்டதால் பழுதடைந்த தனது செயற்கை காலை புதுப்பிக்கவும், சிகிச்சைக்காகவும் வேண்டி மதானி அனுப்பிய மனுக்கள் குப்பைக் கூடையில் எறியப்பட்டன. அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா மதானி விசயத்தில் மிக மூர்கத்தனமாக நடந்து கொண்டார்.

மதானியை விடுதலை செய்யக் கோரி தமிழகத்திலும், கேரளத்திலும் மிகப்பெரும் மக்கள் இயக்கங்கள் நடைபெற்றன. 2006 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும், அப்பாவி சிறைவாசிகளின் விடுதலையை முன்னிலைப்படுத்தி த.மு.மு.க போன்ற தமிழக முஸ்லிம் அமைப்புகள் தேர்தலை எதிர்கொண்ட விதமும், மதானி உள்ளிட்ட அப்பாவிகளின் விடுதலைக்கு வழிவகுத்தது.

கலைஞர் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற உடன் அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் குறித்த கோரிக்கைகள் கனிவோடு பரிசீலிக்கப்பட்டன. மதானிக்கு மருத்துவ சிகிச்சை கிடைத்தது. பின்னர் குற்றம் நிரூபிக்கப்படாமல் ஒன்பதரை ஆண்டுகால சிறை வாழ்கையை முடித்துக் கொண்டு 2007 ஆகஸ்ட் 1 - இல் விடுதலையாகி வெளியே வந்தார் மதானி. பரபரப்பான அவரது அரசியல் பயணத்தை முடக்கி, கம்பீரமான அவரது தோற்றத்தை ஒடுக்கி, இயங்க முடியாத நிலைக்கு அவரைத் தள்ளிய பிறகு குற்றமற்றவர் என்று விடுதலை செய்தது நீதிமன்றம்.

விடுதலைக்குப் பின் மதானியைத் தவிர வேறு யாராக இருந்தாலும், நலிந்த தன் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு பொது வாழ்வுக்கு ஓய்வு கொடுத்திருப்பார்கள். வெகு மக்களிடம் தன் மீது ஏற்பட்டிருக்கும் அனுதாபத்தை அரசியல் லாபத்திற்கான அறுவடையாகக் கருதி காங்கிரசோடு பேரம் நடத்தி இருப்பார்கள். முஸ்லிம்களுக்கான பிரச்சனைகளைப் பேசியதனால் தானே வம்பு ; பேசாமல் 'பதவி அரசியல்' நடத்துவோம் என்று கொள்கை அரசியலை கை கழுவி இருப்பார்கள்.

ஆனால் அப்படி எந்த முடிவுக்கும் வரவில்லை மதானி. முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அரசியல் எழுச்சிக்கான தனது பயணத்தை முன்பை விடவும் வேகமாகக் கூர் தீட்டினார். பேச்சில் இருந்த வீச்சைக் குறைத்து அதை செயலில் காட்டினார். தன் உடல் நிலையைப் புறம் தள்ளி விட்டு கேரளா முழுவதும் வலம் வந்தார். ஒன்பதரை ஆண்டுகாலம் முடங்கிக் கிடந்த தனது தொண்டர்களை மீண்டும் தட்டி எழுப்பினார்.

மதானியின் கதை முடிந்து விட்டது என்று கணக்குப் போட்டு காய் நகர்த்தியவர்களுக்கு, அவரது இத்தகைய மீள் எழுச்சி எரிச்சலைத் தந்தது. ஏற்கனவே கோவைக் குண்டுவெடிப்பு வழக்கில் அவரைச் சிக்கவைத்து குளிர் காய்ந்தவர்கள் மீண்டும் அதே பாணியில் அவரைக் குதறத் தொடக்கி உள்ளனர்.

Aloor Shanavas with Abdul samath Master [father of madhani]

2008 ஆம் ஆண்டு ஜூலை 25 - ஆம் நாள் பெங்களூரில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் மதானி 31- ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, கர்நாடக மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் மதானி சேர்க்கப்பட்டுள்ள விதத்தையும், வழக்கின் போக்கையும் பார்க்கின்ற போது , மதானியை ஒரேயடியாக ஒழித்துக்கட்ட மிகப்பெரிய சதி வலைகள் பின்னப்படுவதை அறிய முடிகின்றது.

கேரளாவைச் சார்ந்த 'தடியன்டவிட' நசீர் என்பவர் 2009 ஆம் ஆண்டு, பங்களாதேசத்தில் வைத்து அங்குள்ள ரைபிள் படையினரால் கைது செய்யப் பட்டார். லஷ்கரே தொய்பா தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்ட நசீர், கொடுத்ததாக சொல்லப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் இப்போது மதானி வேட்டையாடப்படுகிறார்.

2005 ஆம் ஆண்டு கேரள மாநிலம் கலமச்சேரியில், தமிழக அரசுப் பேருந்து எரிக்கப்பட்ட வழக்கில், 'தடியண்டவிட' நசீரிடம் கேரள போலீசார் விசாரித்ததாகவும், விசாரணையில், ''தமிழக அரசுப் பேருந்தை எரிக்கச் சொன்னது மதானியின் மனைவி சூஃபியாதான் '' என்று நசீர் சொன்னதாகவும் கூறி 2009 டிசம்பரில் சூஃபியா கைது செய்யப்பட்டு எர்ணாகுளம் சிறையில் அடைக்கப்பட்டார். அது தனிக் கதை.

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில், பெங்களூர் மாஜிஸ்த்ரேட் நீதிமன்றத்தில் மதானி மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி, மதானியின் சார்பில் அவரது வழக்கறிஞர் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவுக்கு எதிராக கர்நாடக காவல் துறையினர் பதில் மனுத் தாக்கல் செய்தனர்.

57 பக்கங்கள் கொண்ட அந்த பதில் மனுவில் காவல்துறை கையாண்டிருக்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் விஷம் தோய்ந்தவையாக இருக்கின்றன. மதானிக்கு எதிரான சதியின் முழுப் பரிணாமமும், முஸ்லிம்கள் மீதான அதிகார வர்க்கத்தின் வெறுப்புணர்வும் அதில் அப்பட்டமாகத் தெரிகிறது.

'' பெங்களூரில் குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன் மதானியும், கைது செய்யப்பட்ட நசீர் உள்பட 22 குற்றவாளிகளும், கேரள மற்றும் கர்நாடக எல்லையில் உள்ள குடகு நகரில் ஒன்று கூடி, அங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் வைத்து சதித்திட்டம் வகுத்ததாகவும், இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்பது அவர்களது திட்டம் என்றும், இதற்காக இந்தியாவில் வன்முறையைத் தூண்டி விட்டு, மத்திய மாநில அரசுகளுக்கு இடையூறு செய்வதே அவர்களின் நோக்கம் என்றும் போலீஸ் கூறியுள்ளது.

மேலும், நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து வெடி பொருட்களை ரகசியமாக கேரளத்துக்கு கடத்தி, அங்கு வெடிகுண்டைத் தயாரித்துள்ளனர் என்றும், இவ்வாறு தயாரிக்கப்பட்ட குண்டுகளை மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிக்க வைத்து மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளார்'' என்றும் நீளுகிறது போலீஸ் அறிக்கை.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து மதானி குற்றமற்றவராக விடுவிக்கப் பட்டாலும், மதானியை தீவிரவாதியாக சித்தரிக்கும் ஆளும் வர்க்கத்தின் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதையே போலீசின் இந்த அறிக்கை எடுத்துக் காட்டுகிறது.

சிறையிலிருந்து வெளி வந்த பின்னர் மதானியின் முழு செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் மத்திய மாநில புலனாய்வுக் குழுவினரால் கண்காணிக்கப்படுகிறது. அவரது சுற்றுப்பயணம் குறித்த முழு தகவலும் கேரள காவல் துறையிடம் இருக்கிறது.அப்படிப்பட்ட சூழ்நிலையில், 24 மணி நேரமும் கண்காணிப்பு வளையத்துக்குள் இருக்கும் ஒருவர், எப்படி குண்டு வெடிப்புச் சதியில் ஈடுபட முடியும்? குடகு நகரில் ரகசியமாகக் கூடி திட்டம் தீட்ட முடியும்? என்றெல்லாம் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் ஜனநாயக நாட்டில் விடை இல்லை.

நசீர் கைது செய்யப்பட்டு சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு, '''மதானிக்கும் குண்டுவெடிப்பில் பங்குண்டு'' என்று அவர் வாக்குமூலம் அளித்ததாகக் கூறி மதானி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் காவல் துறையின் இந்த மோசடித்தனத்தை, கொச்சி உயர் நீதி மன்றத்தில் இருந்து வெளியே வரும் போது பத்திரிகையாளர்களை சந்தித்த நசீர் பகிரங்கமாக அம்பலப் படுத்தினார். ''பெங்களூர் குண்டுவெடிப்பில் மதானிக்கு தொடர்பு உண்டு என்று தான் கூறவே இல்லை'' என்று உறுதியாக மறுத்தார். ஆனாலும் காவல் துறையும், நீதி மன்றமும் அதை எல்லாம் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. மதானியை சூறையாட வேண்டும் என்று அதிகார வர்க்கம் முடிவு செய்து விட்ட பிறகு எந்த உண்மையைத் தான் அவர்களால் ஏற்க முடியும்?

இந்தியாவை இஸ்லாமிய நாடாக்க சதி நடக்கிறது என்று கர்நாடக பாஜக அரசின் காவல்துறை சொன்னதைப் போலவே, கேரளாவின் கம்யூனிஸ்ட் முதல்வர் அச்சுதானந்தனும் வாந்தி எடுத்தார். முஸ்லிம்களை ஒடுக்குவதில் இந்துத்துவத்திற்கும், இடதுசாரிகளுக்கும் இடையே இருக்கும் கள்ள உறவு இதன் மூலம் அம்பலத்திற்கு வருகிறது.

குற்றமே செய்யாமல், விசாரணைக் கைதியாக கோவை சிறையில் மதானி இழந்த ஒன்பதரை ஆண்டுகளுக்கு, பதில் சொல்ல வக்கற்றவர்கள், தற்போது மதானி விசயத்தில் 'சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும், அவர் குற்றவாளியா இல்லையா என்பதை சட்டம் முடிவு செய்யட்டும்' என்றும் கூறி தப்பிக்க முயலுகின்றனர்.

மதானி கைது செய்யப்பட்டுள்ள 'அன்லாஃபுல் ஆக்டிவிட்டீஸ் பிரிவென்சன் நடைமுறைச் சட்டம் - 2008 ' என்ற சட்டம் எந்த வகையிலும் நீதி வழங்காது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இதே போன்ற கறுப்புச் சட்டங்களால் ஏற்கனவே முஸ்லிம்கள் பட்ட காயங்களும், அதனால் ஏற்பட்ட ரணங்களும் இன்னும் ஆறாத வடுவாய் இருக்கிறது. இந்தக் கொடுஞ்சட்டத்தின் படி, சப் இன்ஸ்பெக்டர் ரேன்கிலுள்ள எந்த ஒரு அதிகாரியும், நாட்டில் யாரையும் சந்தேகத்தின் பேரில் குற்றவாளியாக்க முடியும். அதன் பின்னர் 150 நாட்கள் வரை ஜாமீனில்லாமல் சிறையில் அடைக்கலாம். குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீன் கோரி விண்ணப்பித்தால் நீதி மன்றமும் எதுவும் செய்ய இயலாது. ஏனெனில் நீதிமன்றத்தின் எந்த ஒரு அனுமதியும் இன்றி 150 நாட்கள் வரை சிறையில் அடைக்க காவல்துறைக்கு சட்ட ரீதியான அதிகாரமுண்டு.

வழக்கமான சட்ட நடைமுறைகளின்படி, சாதாரண நிலையில் ஒருவரை கைது செய்தால், அவரை 24 மணி நேரத்துக்குள் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும். நீதி மன்றம் அவரை 14 நாட்கள் ரிமாண்ட் செய்யலாம். தொடர்ந்து பொறுப்பில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றால் 15 ஆம் நாள் மீண்டும் நீதி மன்றத்தை அணுக வேண்டும்.

குற்றவாளி என்று நிறுவப்படும் வரை, ஒரு குடிமகனுக்கு உரிய அடிப்படை உரிமைகளைக் கருத்தில் கொண்டே சட்டத்தில் இவ்வாறெல்லாம் வழி வகை செய்யப் பட்டுள்ளது. ஆனால், மக்களுக்கு சட்டம் வழங்கியுள்ள இத்தகைய உரிமைகளை காலி செய்து அநீதி இழைக்கவே, அரசு அதிகாரம் புதிய கறுப்புச் சட்டங்களை இயற்றி வைத்துள்ளது. அப்படி என்றால் சட்டம் யாருடைய வழியில் செல்கிறது?

வழக்கு விசாரணை எல்லாம் முடிந்து, குற்றம் சற்றப்பட்டவர் நிரபராதி என்று விடுவிக்கப் பட்டால், சட்டம் போனது எந்த வழியில் என்று மானமுள்ள எவராவது விடையளிப்பார்களா?

அச்சுதானந்தனும், பிரணாய் விஜயனும், ரமேஷ் சென்னிதாலாவும், குஞ்சாலிக் குட்டியும் கூறுகின்ற, சட்டத்தின் யோக்கியதை இவ்வளவுதானே.. இவர்களுக்கெல்லாம் கொஞ்சமேனும் மானமும், சூடு உணர்ச்சியும் இருந்தால் ''சட்டம் சட்டத்தின் பாதையில் செல்லட்டும்'' என்று கூச்சமின்றி கூறுவார்களா?

மதானி விசயத்தில் யாரைக் கேட்டாலும் 'சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்' என்று கூறி சட்டத்தைக் கை காட்டி விட்டு பதுங்கி விடுகின்றனர். இந்தச் சட்டம் என்றைக்குத்தான் முஸ்லிம்களுக்கு நீதியை வழங்கி இருக்கிறது? முஸ்லிம்கள் என்றாலே சட்டம் ஒரு வழியிலும், நீதி வேறு வழியிலும் அல்லவா செல்கிறது... இங்கே சங்கராச்சாரிக்கும், அப்துல் நாசர் மதானிக்கும் ஒரே சட்டம்தான்... ஆனால் நீதி?

சங்கரமடப் பூசாரி சங்கர ராமனை கூலிப்படையை ஏவி கொலை செய்த வழக்கில் சங்கராச்சாரிக்கு, குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பே, சதிக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என பிணை கொடுக்கிறது நீதி மன்றம். விடுமுறை நாளில் கூட சங்கராசாரிக்காக திறந்தன நீதிமன்றத்தின் கதவுகள். சுவாமிகளை சிறையில் அடைக்காமல் நீதிபதிகளின் குடியிருப்பிலேயே காவலில் வைக்கலாமே என்று யோசனை சொன்னார் ஒரு நீதிபதி. சிறையில் மலம் கழிக்க வாழை இலை கொடுக்கும் அளவுக்கு சங்கராசாரிக்காக வளைந்து கொடுக்கிறது சட்டம். ஒரு குற்றவாளிக்கு வழங்கப்பட்டது நீதி... ஆனால் குற்றமற்ற மதானிக்கு?

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆயுள் தண்டனை; அல் உம்மாவுக்குத் தடை.. ஆனால் குண்டுவெடிப்புக்கு காரணமாக அமைந்த, 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட கோவை கலவரத்தை, முன்னின்று நிகழ்த்திய இந்துத்துவக் குண்டர்களுக்கும், முஸ்லிம்களை சுட்டுத்தள்ளிய காவல் துறையினருக்கும் தடையுமில்லை, தண்டனையுமில்லை!

பழனி பாபாவின் ஜிகாத் கமிட்டிக்குத் தடை.. பழனி பாபாவைக் கொன்றவர்களுக்கோ விடுதலை!

இஸ்லாமிய மாணவர் அமைப்பான 'சிமி' க்குத் தடை.. ஆனால் சிமியின் பெயரால் இந்தியா முழுவதும் மிகப்பெரிய குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய ஆர் எஸ் எஸ்ஸுக்கு சகல சுதந்திரம்!

மாலேகான், புனே, அஜ்மீர், ஹைதராபாத், கோவா என நாட்டின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட அபினவ் பாரத், சனாதன் சன்ஸ்தான், இந்து ஜாக்ருதி சமிதி ஆகிய இந்துத்துவ தீவிரவாதஅமைப்புகளையும், அவற்றை பல்வேறு பெயர்களில் இயக்கிக் கொண்டிருக்கும் மூல அமைப்பான ஆர் எஸ் எஸ்ஸையும் தடை செய்ய அரசுக்குத் துணிவில்லை.

குண்டுவெடிப்புகளில் ஆர் எஸ் எஸ்ஸுக்கு தொடர்பு இருப்பதற்கான அனைத்து வகையான ஆதாரங்களும், வீடியோ காட்சிகளும் கிடைத்த பிறகும், ஹெட்லைன்ஸ் டுடே , தெஹல்கா போன்ற பெரிய ஊடகங்கள் அதை அம்பலப் படுத்திய பிறகும், ஆர் எஸ் எஸ் தலைமையகத்தை சோதனை செய்யவோ, ஆர் எஸ் எஸ் தலைவர்களை விசாரணைக்கு அழைக்கவோ துப்பில்லாத தொடை நடுங்கி அரசுகள், மதானியைக் குதறுவதில் முனைப்புக் காட்டுகின்றன.

நந்திகத்தில் உள்ள ஆர் எஸ் எஸ் ஊழியர் வீட்டில் குண்டு வெடிப்பு; கான்பூரில் பஜ்ரங்தள் நிர்வாகி வீட்டில் குண்டு வெடிப்பு; தென்காசி ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் குண்டு வெடிப்பு, என... ஆர் எஸ் எஸ் காரர்கள், குண்டுகளை தயாரித்துக் கொண்டிருக்கும் போதே வெடித்து சிதறிய குண்டுகள் ஏராளம், தாராளம்... இப்படி, பட்டவர்த்தனமாக ஆர் எஸ் எஸ்ஸின் பயங்கரவாதம் அம்பலப்பட்ட பிறகும், மதானி வெடிகுண்டு தயாரித்து சப்ளை செய்தார் என்று கதை விடுகிறது காவல்துறை.

2006 - லிருந்து நடைபெற்றுவரும் ஏழு மிகப்பெரிய குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர் எஸ் எஸ்ஸின் கள்ளக் குழந்தையான அபினவ் பாரத்துடன், உறவு வைத்துள்ள பல ராணுவ அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரைப் பற்றிய விபரங்கள், புலன் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த பிறகும், அவர்களில் எவரும் விசாரணைக்கு அழைக்கப் படுவதில்லை. 'தடியன்டவிட' நசீரை தேடிப்பிடித்து, நோண்டி நொங்கெடுத்தவர்களுக்கு, இந்த இந்துத்துவ அதிகாரிகளெல்லாம் கண்ணில் தெரிவதில்லை.

பெங்களூர் குண்டுவெடிப்பில் ஒருவர் பலியான வழக்கில், மதானியை சிக்க வைத்து சிறை பிடித்துள்ளவர்கள், குஜராத்தில் மூவாயிரம் முஸ்லிம்களைக் கொன்று நர வேட்டையாடிய நரேந்திர மோடியை, அதிகாரத்தில் அமர்த்தி அழகு பார்க்கின்றனர்.

போபாலில் பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்த அமெரிக்கப் பயங்கரவாதி ஆண்டர்சனை விமானத்தில் ஏற்றி தப்பி ஓடச் செய்து விட்டு, செத்துப் போன நரசிம்ம ராவ் மீது பழிபோடுகின்றனர். மதானியை விரைவாக ஒப்படைக்காத கேரள அரசின் மீது, கர்நாடக காவல்துறைக்கு வந்த கோபம், ஆண்டர்சனை ஒப்படைக்காத அமெரிக்கா மீது வருவதில்லை.

பாபர் மஸ்ஜித் இடிப்பில் மிக முக்கிய குற்றவாளிகளாக லிபரான் கமிஷனால் அடையாளப்படுத்தப்பட்ட அத்வானி, வாஜ்பாய், முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி போன்ற 68 குற்றவாளிகளில் எவர் மீதும் நடவடிக்கை இல்லை. 8 கோடி ரூபாய் மக்கள் வரிப் பணத்தை வாரி இறைத்து, 17 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டு , 1000 பக்கங்களில் சமர்பிக்கப் பட்ட லிபரான் அறிக்கை, இப்போது எந்தக் குப்பைத் தொட்டியில் கிடக்கிறதோ தெரியவில்லை.

பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பின், மும்பையில் நடைபெற்ற மிகப்பெரும் வகுப்புக் கலவரங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை இனப்படுகொலை செய்த குற்றவாளி என, நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா கமிஷனால் அறிவிக்கப்பட்ட, மும்பை பயங்கரவாதி பால்தாக்கரே மீது இதுவரை எந்தச் சட்டமும் பாயவில்லை.

சந்தேகத்தின் அடிப்படையிலும், புனையப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையிலும் முஸ்லிம்களை வேட்டையாடும் காவல் துறைக்கு, அரசால் நியமிக்கப் பட்ட விசாரணை ஆணையத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவர்களை கைது செய்ய துணிவில்லை.

பன்முகத் தன்மை உடைய இந்தியாவின் அரசியல் சாசன சட்டத்திற்கும், மதச் சார்பின்மைக்கும் எதிராக, மும்பையில் வட இந்தியர்களை, குறிப்பாக பீகார் மாநில எளிய மக்களை விரட்டி விரட்டி வேட்டையாடுகிறது நவ நிர்மான் சேனா. 'என்னை கைது செய்தால் மும்பையே பற்றி எரியும்' என்று பகிரங்கமாக கொக்கரிக்கும் ராஜ் தாக்கரேக்களெல்லாம் இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்களாகக் கருதப்படுவதில்லை.

48 கிருமினல் வழக்குகளில் தொடர்புடைய்ய ஆகப் பெரிய குற்றவாளி ஸ்ரீ ராம்சேனா பிரமோத் முத்தலிக் மீது தடாவும் இல்லை, பொடாவும் இல்லை.பெரும் தொகையை பேரம் பேசி கலவரம் செய்யும் புது வகை பயங்கரவாதியான முத்தலிக் மீது இந்தியாவின் பாதுகாப்புச் சட்டங்கள் பாய்வதில்லை.

ஸ்ரீராம் சேனாவைத் தொடங்குவதற்கு முன் முதாலிக் பஜ்ரங்தளத்தில் இருக்கும்போதே பல்வேறு வழக்குகளில் சிக்கிய பின்னணி கொண்டவன்.அப்படி இருந்தும் அவர்களால் எந்தத் தடையும் இன்றி அமைப்பு நிறுவ முடிகிறது; சுதந்திரமாக இயங்க முடிகிறது. பெங்களூர் குண்டுவெடிப்பில் ஸ்ரீராம் சேனாவின் கூலிப் படைக்குத் தொடர்பு உண்டு என்று ஊடகங்கள் உண்மையை உரைத்த பிறகும், அந்தக் கோணத்தில் விசாரணையை முடுக்கி விடாமல், கேரளாவுக்குச் சென்று மதானியைக் கொத்தி வந்துள்ளது கர்நாடக பாஜக அரசு...

***
மதானியின் விசயத்தில் நடப்பவை அனைத்தும் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பது நன்கு தெரிந்த பிறகும், அவர் குற்றம் புரியாத அப்பாவி என்பது புரிந்த பிறகும், கேரளாவின் அரசியல் கட்சிகள் அவரை வெறுப்பது ஏன் என்ற கேள்வி எழாமல் இல்லை. மதானியின் கைது விவகாரத்தில் கேரளாவில் பாஜகவும், காங்கிரசும், கம்யுனிஸ்ட்டும், முஸ்லிம் லீக்கும் ஓரணியில் நின்று முழங்குகின்றன. மதானி ஒழிக்கப்பட்டால் தான் தாங்கள் நிம்மதியாக அரசியல் நடத்த முடியும் என்று எல்லா கட்சிகளும் எண்ணுகின்றன.

மதானியை உலவ விட்டால் அவர் முஸ்லிம்களை அணி திரட்டுவார்; கேள்வி கேட்கும் படி உசுப்பி விடுவார்; அடிமை அரசியலுக்கு சாவு மணி அடித்து விடுவார் என்று, மதானியின் வலிமை குறித்த பயம் கேரள அரசியல் கட்சிகளை பிடித்தாட்டுகிறது. அதிகார ருசி கண்ட முஸ்லிம் லீக், பதவியை இழக்கவோ அல்லது வேறு ஒருவர் அந்த இடத்திற்கு வரவோ சிறிதும் அனுமதிக்காது. பதவி இல்லாமல் இருக்கவே முடியாது என்ற வெறி முற்றிய பிறகு எந்த இலக்கணங்களுக்கும் கட்டுப்பட மனம் வராது.

பாபர் மஸ்ஜித் இடிப்பில் இந்துத்துவ சக்திகளுக்கு பக்கத் துணையாக நின்ற, காங்கிரஸ் கட்சியின் நயவஞ்சகத்தனத்தைக் கண்டித்து, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று, முதுபெரும் முஸ்லிம் லீக் தலைவர் இப்ராகிம் சுலைமான் சேட் கர்ஜித்தபோது, முஸ்லிம் லீக்கின் பதவி வெறி பிடித்த கேரள தலைவர்கள்தான் அதற்கு முட்டுக் கட்டையாக நின்றனர். மனம் வெறுத்துப் போன சுலைமான் சேட், கொள்கை காக்கும் போராளியாக முஸ்லிம் லீக்கில் இருந்து வெளியேறி தேசிய லீக்கைத் தொடங்கும் நிலை வந்தது.

மதானி ஒழிந்தால் பாஜக வை விட அதிகமாக மகிழ்ச்சி அடையும் கட்சியாக முஸ்லிம் லீக் திகழ்கிறது. மதானியின் மீதான அடக்குமுறை அரங்கேறிக் கொண்டிருக்கும் போதே, கேரளாவில் பிற முஸ்லிம் அமைப்புகளான பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மீதும், ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் மீதும் அரச மற்றும் ஊடக பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது.

நியாயமான வழியில் நின்று, சமரசமற்ற முறையில், உயிரோட்டமான அரசியலை முன்னெடுக்க முனையும் முஸ்லிம் அமைப்புகளை முடக்கிப் போடுவதில் அதிகார வர்க்கம் குறியாய் இருக்கிறது. முஸ்லிம்களுக்கான தனித்த அரசியல் எழுச்சியை ஊடகங்கள் விரும்புவதுமில்லை, கண்டுகொள்வதுமில்லை.

முஸ்லிம்களின் பிரச்சனைகளை முன்வைத்து ஜனநாயக வழியில் அரசியல் நடத்துகிறவர்களை அடிப்படைவாதிகளாகவும், தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும், மதவெறியர்களாகவும் சித்தரிக்கின்ற போக்கு, நாடு விடுதலை பெற்ற நாள் முதல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது .

இநதிய முஸ்லிம்களுக்கான தனித்த அரசியல் இயக்கமான முஸ்லிம் லீக், பிரிவினைக்குப் பின் பாகிஸ்தானின் கட்சி என்றாகிவிட்ட நிலையில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்ற பெயரில், இநதிய முஸ்லிம்கள் தமது தனித்த அடையாளத்தோடு மீண்டும் அரசியல் நடத்தப் புறப்பட்டதை, அன்றைய ஆளும் காங்கிரசால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

இநதிய முஸ்லிம்களுக்கு தலைமை ஏற்க காயிதே மில்லத் துணிந்த போது, அவரை முடக்கிப் போடுவதற்கான எல்லா ஆயுதங்களையும் காங்கிரஸ் கட்சி கையில் எடுத்தது.

முதலில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்றொரு அமைப்பு உருவாகி விடாமல் தடுப்பதில் கவனம் செலுத்தியது; முஸ்லிம் லீக்கின் முதுபெரும் தலைவர்களின் வாயாலேயே ''முஸ்லிம் லீக் இனி நமக்கு வேண்டாம்'' என்று சொல்ல வைத்தது; முஸ்லிம் லீக்கை விட்டு வெளியேறி எங்களோடு இணைந்தால், உயர் பதவிகளைத் தருகிறோம் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியது; காயிதே மில்லத் மசிய மாட்டார் என்று தெரிந்ததும், அபுல் கலாம் ஆசாத்தை முன்னிறுத்தி முஸ்லிம்களை வளைக்கப் பார்த்தது; காங்கிரசின் இத்தகைய எல்லா தந்திரங்களையும் தவிடு பொடியாக்கி விட்டு, இந்திய முஸ்லிம்களுக்குத் துணிச்சலாக தலைமை ஏற்றார் காயிதே மில்லத்.

அதன் பிறகு அவரை கண்காணிக்கத் தொடங்கியது இந்திய அரசு. தேச விரோத செயலில் அவரை சிக்க வைக்க ஏதேனும் வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கித் தவித்தது அரசு. காயிதே மில்லத் வெளிநாடு சென்ற போது, அவரது நடவடிக்கைகளை உளவு பார்க்க காங்கிரஸ் அரசு காமராஜரை அனுப்பி வைத்ததாக வரலாற்றுக் குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது.

ஆனால், இன்றைக்கு முஸ்லிம் லீக்கையோ அல்லது முஸ்லிம் லீக் தலைவர்களையோ, ஆளும் வர்க்கம் அப்படிப் பார்ப்பது இல்லை. முஸ்லிம்களின் பிரச்சனைகளைப் பற்றி இன்றைய முஸ்லிம் லீக், காயிதே மில்லத்தைப் போல் பேசுவதில்லை. வகுப்பு வாதத்துக்கு எதிராக வீச்சோடு களமாடுவதில்லை.

அவர் தவறாக நினைத்து விடுவாரோ, இவர் தவறாக நினைத்து விடுவாரோ...அல்லது கூட்டணித் தலைமை கோபித்துக் கொள்ளுமோ என்று பல கணக்குப் போட்டு மென்மையான முறையில் அரசிய நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அது வெறுமனே பதவியை தக்க வைத்துக்கொள்கிற சுயநல அரசியல். ஆகையினால் இன்றைய முஸ்லிம் லீக்கை, ஆளும் வர்க்கமோ அல்லது ஊடகங்களோ கண்காணிப்பதுமில்லை; பிரச்சனைக்கு உரியவர்களாக கருதுவதுமில்லை.

அன்றைக்கு காயிதே மில்லத்தைப் போல், இன்றைக்கு கொள்கை சமரசமற்ற முறையில் யார் யாரெல்லாம் அரசியலை முன்னெடுக்கின்றர்களோ; போர்குணத்தோடு அமைப்பு நடத்துகிறார்களோ அவர்களின் மீதே, ஆளும் வர்க்கத்தின் பார்வையும் , ஊடகங்களின் பார்வையும் ஒரு சேரக் குவிகிறது. காயிதே மில்லத்தை தேச துரோகி என்றார்கள்; கண்காணித்தார்கள்; அவரது சகாக்களை அவரிடமிருந்து பிரித்து, அவரை பலவீனப் படுத்த முயன்றார்கள்; மிதமான அணுகுமுறை உள்ள மாற்றுத் தலைமையை முன்னிறுத்தினார்கள்.... இன்றைக்கும் அதே வழிமுறையை, அதே நடைமுறையை ஆளும் வர்க்கம் பின் பற்றி வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

அன்றைக்கு அரசோடு கூட்டுச் சேர்ந்து, காயிதே மில்லத்தை விமர்சித்த, சுயநலம் கொண்ட முஸ்லிம்களின் இடத்தை, இன்றைக்கு முஸ்லிம் லீக் பிடித்துக் கொண்டிருப்பது தான் காலத்தின் கோலம்.

மதானியையும், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவையும், ஜமாத்தே இஸ்லாமியையும் கேரளாவில் முடக்கிப் போடுவதற்கு, ஆளும் தரப்பு கையாளுகின்ற அத்தனை வழிமுறைகளையும் முஸ்லிம் லீக் ஆதரிக்கிறது. போர்க் குணமிக்க முஸ்லிம் அமைப்புகள் விசயத்தில் அரசும், காவல் துறையும், ஊடகங்களும் என்ன சொல்கிறார்களோ, அதை ஒரு வரி விடாமல் வார்த்தை விடாமல் அப்படியே ஏற்றுக் கொள்ளுகிற மனநிலைக்கு, பாரம்பரிய முஸ்லிம் தலைமை தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது.

***
மதானி கைது செய்யப் பட்ட போது, ஊடகங்கள் அதைக்கையாண்ட விதம் மிகவும் அருவருப்பானது. ஒரு குற்றவாளியை கர்நாடக அரசுக்கு கை மாற்றுவதில், கேரள அரசு தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தி விட்டதாக கேரள ஊடகங்கள் விஷத்தைக் கக்கின. தமிழ் நாட்டின் பிரதான ஊடகமான சன் தொலைக்காட்சியின் செய்தி சேனலில், மதானியைக் கொச்சைப் படுத்தும் வகையில் செய்தி வாசிக்கப் பட்டது.

தான் குற்றவாளி அல்ல என்ற போதும் இறைவனுக்கு அடுத்த படியாக நீதி மன்றத்தின் மீது தான் வைத்துள்ள மரியாதையின் காரணமாக, சரணடைய விரும்புவதாக அறிவித்தவர் மதானி. அப்படிப்பட்ட ஒருவரை, ''ஆம்புலன்ஸ் மூலம் தப்பி ஓட முயன்ற போது பிடிபட்டதாக'' சன் டிவி தலைப்புச் செய்தி சொன்னது. செய்தியின் உள்ளீடாக, ''மதானி கோவை குண்டு வெடிப்பு வழக்கில் எட்டு ஆண்டுகள் தண்டனைப் பெற்றவர்'' என்று சொல்லி வரலாற்றுத் திரிபு செய்தது. விசாரணை கைதியாக கோவை சிறையில் ஒன்பதரை ஆண்டுகளை இழந்து, குற்றமற்றவர் என்று விடுதலையான மதானியின் உண்மை முகத்தைக் காட்டுவதற்கு ஊடகங்களுக்கு மனமில்லை. மதானியைக் கொச்சைப்படுத்தும் போர்வையில், முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படுத்திய சன் டிவிக்கு தமிழக முஸ்லிம்கள் உடனடி பதிலடி கொடுத்தனர். தமிழகம் முழுவதும் இருந்து கிளம்பிய எதிர்ப்பு அலைக்குப் பணிந்து, தனது தவறை உணர்ந்ததாக வருந்தியது சன் டிவி.

இணைய தளங்களில் ஜெயமோகன் போன்ற இந்துத்துவ சிந்தனை உடைய இலக்கிய பயங்கரவாதிகள், மதானியை தீவிரவாதத்தின் ஊற்றாக சித்தரித்துக் கொண்டிருக்கின்றனர். இளம் தலை முறையினரின் களமாகத் திகழும் இணைய தளத்தில், முஸ்லிம் சமூகத்தின் போராளிகளை கொடூரமானவர்களாகவும், மனித குல விரோதிகளாகவும் காட்டுவதன் மூலம், முஸ்லிம்கள் மீதான வெறுப்பு வெகு மக்களிடம் பற்றிப் பரவுவதற்கு திட்டமிட்டு வேலை செய்கின்றனர்.

அறியாமையில் சிக்கி உழலும் முஸ்லிம் சமூகத்திற்கு, ஜெயமோகனையும் தெரியாது; இணைய தளமும் புரியாது என்பதுதான், உச்சக்கட்ட பரிதாபம்.

கருத்துருவாக்கம் செய்யக் கூடிய வலிமை மிகுந்த களமான ஊடகத்தில் முஸ்லிம்கள் இல்லை என்பதுதான், இத்தகைய அவலங்களுக்கு காரணமாக இருக்கிறது.

முஸ்லிம்கள் ஊடகத்தில் மட்டுமா இல்லை? அரசியலில் இல்லை; அதிகாரத்தில் இல்லை; கலை இலக்கியத்தில் இல்லை; பண்பாட்டுத் தளத்திலும் இல்லை...... இல்லை, இல்லை, இல்லவே இல்லை... இருப்பதெல்லாம் உள் முரண்பாடுகளும், குழுச் சண்டையும், கொள்கை மோதலும் தான்...

முஸ்லிம்களே! இனியும் இழப்பதற்கு எதுவுமில்லை; மீட்பதற்கோ ஆயிரம் இருக்கிறது.

[ சமநிலைச் சமுதாயம், செப்டம்பர் -2010 இதழ் மற்றும் கீற்று இணையதளத்தில் ஆளூர் ஷா நவாஸ் எழுதிய கட்டுரை ]

அ.மார்க்ஸ்-எழுத்தில் மட்டுமல்ல.,களத்திலும் போராளி!

புத்தாயிரம் ஆண்டில் ஒரு நாள் என்று நினைவு..

உணர்வு வார இதழில் நான் செயலாற்றிக் கொண்டிருந்த காலம்.

அவ்வப்போதைய அரசியல் சமூக அசைவுகள் குறித்து முக்கியமான தலைவர்களையும், எழுத்தாளர்களையும், மனித உரிமை ஆர்வலர்களையும் சந்தித்து உரையாடுவது வழக்கம்.

அப்படி நான் சந்திக்கச் சென்ற ஆளுமைகளில் ஒருவர் பேராசிரியர் அ.மார்க்ஸ்.

தமுமுகவின் அன்றைய நிர்வாகிகளில் ஒருவரும்,முன்னணி அச்சக நிறுவனருமான நண்பர் அ. சாதிக் பாஸாவும் நானும் அ.மார்க்சை சந்திப்பதற்காக மைலாப்பூரில் இருந்த அவரது வீட்டிற்கு சென்றிருந்தோம். என்னைப் பார்த்தவுடன், யார் இந்தப் பையன்? என்று சாதிக்கிடம் கேட்டார் மார்க்ஸ். சாதிக் என்னைப் பற்றி சொன்னவுடன், 'ஓ.. நீங்க தானா ஆளூர் ஷாநவாஸ். முஸ்லிம் சமூகத்தில் இருந்து எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் பெரிய அளவில் உருவாவதில்லை என்று நான் குமுறிக் கொண்டு இருக்கிறேன். அப்படிப்பட்ட நிலையில் உங்களைப் போன்ற இளைஞர்களைப் பார்க்கின்ற போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது' என்று கூறி உற்சாகமூட்டினார்.

அதன் பின்னர் ஒற்றுமை இதழில் 'நான் புரிந்து கொண்ட நபிகள்' என்ற தலைப்பில் அ. மார்க்ஸ் தொடர் கட்டுரை எழுதிய போது, அந்தக் கட்டுரைகளை அவர் வீட்டிற்கே சென்று வாங்கி வரவும், அதை பிழை திருத்தி அச்சுக்கு அனுப்பவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் அவரோடு மிக அதிகமாக நெருக்கம் ஏற்பட்டது.

குஜராத் இனப்படுகொலைகளுக்கு எதிராக 'தோட்டாக்கள்' என்னும் கவிதை தொகுப்பு நூலை 2003 ஆம் ஆண்டு நான் வெளியிட்ட போது, அதற்கு அ.மார்க்ஸ் பெரிதும் துணை இருந்தார். அன்றிலிருந்து இன்று வரை எனது எல்லா நிகழ்ச்சிகளிலும் தவறாமல் பங்கேற்கக்கூடிய ஒரே ஆளுமையாக அவர் மட்டுமே உள்ளார்.
A.Marx speaking at Aloor Shanavas marriage function

எழுத்துலகிலும்,விமர்சன அரங்கிலும், நுண்ணிய தளங்களிலும் பாசிசத்தின் மென்னியை நெறிக்கும் பணியை இடையறாது ஆற்றி வரும் முதன்மையான எழுத்துப் போராளி அ. மார்க்ஸ் ஆவார்.

எழுதுவதோடு நின்று விடாமல் நேரடியாக களத்திற்கே சென்று உண்மையைக் கண்டறிந்து உலகுக்கு சொல்லும் களப்போராளியாகவும் அவர் காட்சியளிக்கிறார்.காஷ்மீர் முதல் இலங்கை வரை, முத்துப் பேட்டை முதல் தென்காசி வரை, முஸ்லிம்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை அம்பலப் படுத்த துணிச்சலாகப் பயணித்து வருகிறார்.

அவரை நான் முதன் முதலில் சந்தித்த போது, முஸ்லிம்களில் வளரும் எழுத்தாளர்கள் குறைவு என்று அவர் குமுறியதாக குறிப்பிட்டிருந்தேன். அவரது அந்தக் குமுறல் எவ்வளவு பெரிய உண்மை என்பதை பின்னர் நிதர்சனத்தில் கண்டேன்.

இன்று முஸ்லிம்களுக்கு எதிராக என்னென்ன தளங்களில் என்னென்னப் பிரச்சனைகள் இருக்கின்றன என்பது பற்றி, இங்கே எந்த முஸ்லிமுக்கும் விழிப்புணர்வு இல்லை. தமக்கு எதிரான சதிகளைப் பற்றி குறைந்தபட்ச விழிப்புணர்வு கூட இல்லாத ஒரு சமூகத்தால் எப்படி அடுத்தக்கட்டத்திற்கு நகர முடியும்?

காஷ்மீர் பிரச்னை பற்றியோ, இலங்கை பிரச்னை பற்றியோ, அமெரிக்காவின் அராஜகம் பற்றியோ, இந்துத்துவத்தின் சதிகள் பற்றியோ, இலக்கியத் துறையில் முஸ்லிம்களுக்கு எதிராக பரப்பப்படும் அவதூறு அரசியல் பற்றியோ தொடர்ச்சியாக கவனிக்கின்ற, பேசுகின்ற, எழுதுகின்ற, அவை குறித்த விவாதங்களை உருவாக்குகின்ற ஒரே ஒரு ஆளுமை கூட தமிழ் முஸ்லிம் சூழலில் உருவாகவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

குழு மோதல்களிலும், கொள்கைச் சண்டைகளிலுமே இங்கே பெரும்பாலான முஸ்லிம்களின் சிந்தனையும் செயலும் வீணாகிக் கொண்டிருக்கிறது. உருவாகி வரக்கூடிய ஒரு சிலரையும் கூட, குப்புறத் தள்ளி முடக்கி விடக்கூடிய கீழறுப்பு வேலைகளும் தொடருகின்றன. இப்படிப்பட்ட ஒரு சூழலில், முஸ்லிம்களின் பிரச்சனைகளைப் பற்றி எழுதுகின்ற விரலாகவும்,பேசுகின்ற குரலாகவும் இயங்குகின்ற ஒற்றை மனிதராக அ.மார்க்ஸ் திகழ்கின்றார்.

''இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக் கதைகள், நான் புரிந்து கொண்ட நபிகள், இலக்கியத்தில் இந்துத்துவம்-காலச்சுவட்டின் ஆள்காட்டி அரசியல், சச்சார் குழு அறிக்கை-அறிமுகம் சுருக்கம் விமர்சனம், பாட நூல்களில் பாசிசம், காஷ்மீர்- என்ன நடக்குது அங்கே, முஹம்மது அப்சல் குரு தூகிலடப் படத்தான் வேண்டுமா, குஜராத்- அர்த்தங்களும் உள்ளர்த்தங்களும், சங்கராச்சாரியாரின் சமரசத் திட்டம் - முஸ்லிம்களுக்கு எதிரான இன்னொரு சதி, பெரியார்-தலித்துகள் முஸ்லிம்கள், இந்துத்துவத்தின் இருள் வெளிகள், இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு, ஆரியக் கூத்து, முஸ்லிம்களுக்கு எதிராக அரசியல் சட்ட அவையில் நடந்தது என்ன, தென்காசி-முத்துப்பேட்டை மதக் கலவரங்கள் ஒரு ஆய்வு''.....இப்படி பட்டியலிட முடியாத அளவுக்கு அ. மார்க்சின் பங்களிப்புகள் நீளமானது, ஆழமானது.

பிரிவினைக்குப் பின், தங்களின் வலிகளையும் வேதனைகளையும் வாய் திறந்து வெளிப்படுத்துவதற்கு கூட வலிமை அற்று அஞ்சி வாழ்ந்த முஸ்லிம் சமூகம், பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பின் வாய் திறந்து பேசவும், வீதியில் இறங்கிப் போராடவும் தன்னை தயார் படுத்திக் கொண்டது. ஆனால் இந்துத்துவத்தை எதிர் கொள்ள அந்தப் போராட்டம் மட்டுமே போதுமென்று முடங்கி விட்ட முஸ்லிம் சமூகத்திற்கு, என்னென்ன வழிகளில் இந்துத்துவத்தை எதிர் கொள்ள வேண்டும் என்று பாடம் நடத்தும் ஆசிரியராக அ. மார்க்ஸ் விளங்குகின்றார்.

நுண்ணிய தளங்களில் நின்று போராடும் அறிவுப் பின்புலமுள்ள ஒருவரைக் கூட முஸ்லிம் சமூகம் பெறாத நிலையில், அ. மார்க்ஸ் மட்டும் இல்லாமல் போயிருந்தால் முஸ்லிம்களின் நிலைமை என்னவாகி இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களின் குரலாக அ.மார்க்ஸ் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருப்பது பலருக்கும் எரிச்சலைத் தருகிறது. 'முஸ்லிம் அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் கைக்கூலி அ.மார்க்ஸ்' என்று அவதூறு பரப்புவதன் மூலம் அவர்கள் தங்களின் அரிப்பை தீர்த்துக் கொள்கின்றனர்.
இலங்கை முஸ்லிம்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசியதற்காக அவரை
ராஜ பக்சேவின் கைக்கூலி என்று தமிழ்த் தேசியவாதிகள் அவதூறு பரப்பி வருகின்றனர்.

அ. மார்க்ஸ் யாருக்கும் கைக்கூலி அல்ல என்பதும், எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப் படுகிறார்களோ அங்கெல்லாம் மக்களின் பக்கம் நிற்பவர் அவர் என்பதும், அவரை அறிந்தவர்களுக்குத் தெரியும், அவரது பாதையையும் பயணத்தையும் நோக்கினால் புரியும்.

இந்த இடத்தில், அ.மார்க்சின் இலங்கைப் பயணம் குறித்த எனது கட்டுரையையும் இணைப்பது பொருத்தமானது என்று கருதுகிறேன்.

***

அண்மையில் இலங்கைக்கு சென்று வந்த பேராசிரியர் அ.மார்க்ஸ், தமது பயண அனுபவங்களை, ஊடகங்கள் வாயிலாகவும், அரங்கு நிகழ்ச்சிகள் மூலமாகவும் தமிழ்நாட்டுத் தோழர்களுடன் பகிர்ந்து வருகின்றார். இலங்கையில் தாம் கண்டவற்றை, கண்டு மனம் கலங்கியவற்றை உள்ளது உள்ளபடி உரத்து பேசி வருகின்றார். அவ்வாறு அவர் பேசுவது இங்குள்ள சிலருக்கு எரிச்சலையும், பலருக்கு ஆறுதலையும் அளித்து வருகிறது.

எரிச்சல் அடைபவர்கள் அனைவரும் அவரை பேச விடாமல் துரத்துகின்றனர். அவரது கூட்டங்களில் பார்வையாளர்கள் போர்வையில் புகுந்து ரகளை செய்கின்றனர்.அவரது மனித உரிமைப் போராட்டங்களை கொச்சைப்படுத்தி, இணைய தளங்களில் பரப்புரை புரிகின்றனர். சமீப நாட்களாக இந்த நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

அ மார்க்சின் கருத்துக்களால் எரிச்சல் அடைந்தவர்களின் எதிர்வினை இப்படி இருக்க, ஆறுதல் அடைந்தவர்களின் பக்கத்தில் இருந்து இத்தகைய எதிர் வினைகளுக்கு எதிராகவோ, அ.மார்க்சுக்கு ஆதரவாகவோ பெரிய அளவில் எதிர்ப்பு ஏதும் எழாமல் இருப்பது, சிறுபான்மையினருக்காக குரல் கொடுத்து வரும் தோழமை சக்திகளை வருத்தமடைய செய்துள்ளது.

பொதுவாகவே, முஸ்லிம்கள் மீது தோழமை உணர்வாளர்கள் முன்வைக்கும் விமர்சனமும் இதை சார்ந்தே உள்ளது. முஸ்லிம்கள் தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு நேரும்போதெல்லாம் மதச்சார்பின்மை குறித்து அதிகம் பேசுவார்கள்; ஒடுக்கப்பட்ட சமூகங்கள் அணி திரள வேண்டும் என்று அறைகூவல் விடுப்பார்கள்; கருத்திலும், களத்திலும் முஸ்லிம் அல்லாத தோழமை உணர்வாளர்கள் குரல் கொடுக்க வேண்டும் என விரும்புவார்கள்.ஆனால், தோழமை சக்திகளுக்கு ஏதேனும் பாதிப்பு வரும் போது மட்டும் அமைதியாகி விடுவார்கள் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன .

இத்தகைய விமர்சனங்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும் முழுமையாக மறுக்கவும் முடியாது.ஏனெனில் அ.மார்க்ஸ் மீதான அண்மைக்கால தாக்குதல்களுக்கு எதிராக முஸ்லிம்களிடம் இருந்து பெரிய அளவில் எதிர்ப்புகள் எழாதது , அத்தகைய விமர்சனங்களுக்கு வலு சேர்க்கின்றது.

ஒடுக்கப்படும் மக்களின் உரிமைக்குரலாய் ஒலித்த டாக்டர்.கே. பாலகோபால் மறைந்த போது, "முஸ்லிம்களில் ஏன் இல்லை ஒரு மனித உரிமைப் போராளி"? என்ற கேள்வி எழும்பியதை இத்தோடு இணைத்துப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

முஸ்லிம்கள், தங்களது பிரச்சனைகள் பற்றி பேச எல்லோரையும் அழைப்பதும் ,மற்றவர்களின் பிரச்சனைகளை கண்டும் காணாமல் கடந்து செல்வதும் மிக மோசமான அணுகுமுறையாகும்.நாம் பாதிக்கப்படும் போது எத்தனை வீரியமாக களமிறங்குகிறோமோ அதே வீரியத்தை மற்றவர்கள் பாதிக்கப்படும் போது நாம் வெளிக்காட்டுவதில்லையே அது ஏன்?

நமக்காக குரல் கொடுக்கும் தோழமை சக்திகள் அவர்களுக்குள் முரண்பட்டு மோதிக்கொள்கிறார்கள் என்றால், அப்போதும் யார் பக்கம் நியாயமோ அவருக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும். இரண்டு பேரும் நமக்கு முக்கியம் என்பதற்காக கருத்து சொல்லாமல் அமைதியாக இருப்பது அநியாயத்திற்கு துணை போகின்ற செயலாகும்.

அ.மார்க்சைப் பொறுத்த வரை ,அவர் ஒரு தீவிரமான மனித உரிமைப் போராளி. சிறுபான்மையின முஸ்லிம்களுக்காக மட்டும் இன்றி கிறிஸ்தவ, தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்காகவும், அரச பயங்கரவாதத்துக்கு எதிராகவும், முழுவீச்சில் குரல் எழுப்பி வரும் எழுத்தாளர் அவர்.தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காகவும்,எடுத்துக்கொண்ட நோக்கத்திற்காகவும் யாரையும் எந்த சூழ்நிலையிலும் எதிர்கொள்ளத் தயங்காதவர். இடம், பொருள், ஏவல் பார்த்து கருத்துக்களை முன்வைக்கும் தந்திரமெல்லாம் அவருக்கு தெரியாது. மனதில் பட்டதை பட்டென சொல்லிவிடும் பழக்கம் உடையவர்.அவரது இத்தகையப் பண்புகளாலேயே அவருக்கு தனி மனிதப் பகை அதிகம்.

இன்று அவரை வெறுக்கின்ற, அல்லது விமர்சிக்கின்ற எல்லோரும் அ.மார்க்சின் இந்த தனி மனிதப் பகைகளைத்தான் அதிகம் சுட்டிக் காட்டுகின்றனர். அவரோடு இணைந்து செயல்பட்டவர்களில் அவரிடம் முரண்படாத ஒருவரையாவது காட்ட முடியுமா என்று கேள்வியும் எழுப்புகின்றனர்.ஒருவரோடு எல்லோரும் முரண்படுகின்றார்கள் என்பதாலேயே அவர் உண்மை அற்றவர் என்றாகிவிடுமா என்பது தான் நமது கேள்வி.

எப்போதுமே ஒளிவு மறைவு இல்லாமல் பேசுகிறவர்களுக்கு எதிரிகள் அதிகம் இருக்கத்தான் செய்வார்கள். வளைந்து, நெளிந்து, தமக்கு சாதகமான கருத்துக்களை முன்வைக்கும் ஒருவரைத்தான் இன்று பலருக்கும் பிடிக்கிறது. இது இன்றைய சமூக சூழலில் பொதுப் புத்தியாகவும் மாறி விட்டது.அவதூறையும், விமர்சனங்களையும் பிரித்துப் பார்க்கத் தெரியாதவர்களாகவும்,விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் அற்றவர்களாகவும் நாம் மாறிக்கொண்டிருக்கிறோம்.அப்படி இருக்கும் போது, அ.மார்க்சைப் போன்று வெளிப்படையாக பேசுபவர்களை யாருக்குத்தான் பிடிக்கும்?

அவரிடம் முரன்பட்டவர்களின் எண்ணிக்கைப் பெருக்கத்தை வைத்தா அவரது போராட்டத்தை மதிப்பிடுவது? மற்றவர்கள் அப்படி மதிப்பிட்டாலும் ஒரு முஸ்லிமால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் முஸ்லிம்களின் இறுதித் தூதரும், வாழ்வியல் வழிகாட்டியுமான நபிகளார் அவர்கள், உண்மையை உரத்துப் பெசியதனாலேயே பலராலும் வெறுக்கப்பட்டவர். அன்றைய சூழலில் அவரோடு உடன் பட்டவர்களை விட முரண்பட்டவர்கள் தான் அதிகம். ஆதரவாளர்களின் எண்ணிக்கை சிறியது என்பதாலேயே அவர் பேசியதெல்லாம் பொய் என்றாகிவிடவில்லை. பலரது எதிர்ப்புக்கும் ஆளான நபிகளார் அவர்கள் தான் பின்னாளில் வரலாற்று நாயகராக உலகத்தையே ஈர்த்தார். ஆகவே அந்த தத்துவத்தின் வழியில் நின்றுதான் ஒரு முஸ்லிமால் இன்றையப் பிரச்சினைகளை பார்க்க முடியும். அப்படி பார்கின்ற போது அ.மார்க்சை விட்டுக்கொடுக்க எங்களால் இயலாது.

தமிழ் சூழலில் பெரியாரை விட எல்லோருடனும் முரண்பட்ட ஒருவரைப் பார்க்க முடியாது.உண்மையை உரத்துப் பேசியதில் அவருக்கு நிகரே கிடையாது.பெரியாரை எதிர்த்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் அவரது தத்துவம் பொய்த்தா போனது? எதையும் கேள்வி கேட்டுப் பழகிய,விமர்சிக்க கற்றுத்தந்த பெரியாரை, பின்பற்றுவதாக சொல்பவர்களும் அ.மார்க்சை எதிர்ப்பது தான் வேடிக்கையாக இருக்கிறது.

அ.மார்க்ஸ், தமது இலங்கைப் பயண அனுபவங்களைப் பற்றி பேசுகின்ற போது, அங்கே தாம் கண்ட அவலங்கள் அனைத்தையும் வெளிப்படுத்தி வருகின்றார்.தமிழர்களுக்கு எதிரான சிங்களப் பேரினவாத அரசின் பயங்கரவாத செயல்களை அவர் அதிகம் அதிகம் பதிவு செய்துள்ளார். மலையகத் தமிழர்களின் நிலையைப் பற்றி பேசி உள்ளார் . தமிழ் முஸ்லிம்களின் அவலங்களைப் பதிவு செய்துள்ளார். ஒரு வரலாற்று ஆய்வாளர் என்ற முறையிலும்,அரசியல் விமர்சகர் என்ற வகையிலும் அங்கே தான் கண்ட அனைத்தையும் தன் பார்வையில் எடுத்துரைக்கிறார்.தமிழர்களின் வாழ்விடங்கள் சிதைக்கப்பட்டு,அங்கெல்லாம் சிங்களவர்களின் ஆதிக்கம் பெருகி வருவதையும், புலிகளின் கல்லறைகள் கூட சிங்களவர்களின் தாக்குதலில் இருந்து தப்பவில்லை என்பதையும் கூர்மையாக பதிவு செய்துள்ளார். அதைப் போலவே தமிழ் முஸ்லிம்களின் வாழ்விடங்களின் தற்போதைய நிலையையும், அவர்களின் இன்றைய அகதி முகாம் வாழ்க்கையையும், அதற்கு காரணமான புலிகளின் அன்றைய வன்முறையையும் நேர்மையாக பதிவு செய்துள்ளார்.

ஒரு ஆய்வாளர் எப்படி பிரச்சனைகளை அனுகுவாரோ ,தாம் கண்டவற்றை எப்படி பகுத்துப் பார்ப்பாரோ, அப்படித்தான் அவர் இலங்கையைப் பார்க்கின்றார்.அப்படியான அவரது ஒளிவு மறைவற்றப் பார்வையில் - வரலாற்றுப் பிழை செய்தவர்களின் செயலைக் குறிப்பிடாமல், அத்தகையப் பிழைகளின் காரணமாக இன்றைக்கும் தொடருகின்ற அவலங்களைப் பற்றி பேசாமல் இருக்க.. அவரால் மட்டும் அல்ல; வேறு எவராலும் முடியாது.

தற்போது புலிகளின் போராட்டம் ஒடுக்கப்பட்டு, ஈழமே துயரமான சூழலில் சிக்கி இருக்கும் இந்த நேரத்தில், கடந்த கால நிகழ்வுகளைக் கிளறி ஆத்திரமூட்டுவது நியாயமா என்பதுதான் அ.மார்க்சை எதிர்க்கும் புலி ஆதரவாளர்களின் ஒருமித்த கேள்வி.ஒரு துயரத்தையோ அல்லது நிகழ்வையோ இன்றைய நிலையில் மட்டுமே பார்ப்பது பாமரப் பார்வை. ஒரு துயரம் எதனால் நிகழ்ந்தது ,அதற்கு யார் யார் காரணம், எந்தெந்த வகையில் காரணம், அதன் தொடக்கம் என்ன,அதற்க்கு தீர்வு என்ன, எதிர்காலத்தில் அது நிகழாமல் இருக்க வழி என்ன, என்றெல்லாம் ஆராய்ந்து பார்ப்பதுதான் ஒரு சிந்தனையாளனின் பார்வை. அ.மார்க்ஸ் அப்படித்தான் பார்க்கிறார்.

ஒரு தரப்பினருக்கு கசக்கிறது என்பதற்காக, அவர் கண்ட உண்மையை பொய் என்று சொல்லி விட முடியாது. அல்லது ஒரு தரப்பினருக்கு ஆறுதல் அளிக்கிறது என்பதற்காக எந்த ஒரு தகவலையும் அவர் மிகைப் படுத்தியும் கூறிவிட முடியாது. எது எப்படியோ அதை அப்படியே பதிவு செய்பவன்தான் உண்மையான ஆய்வாளன். அந்த அடிப்படையில் தான் அவர், அங்கே புலிகளால் துரத்தப்பட்டு அகதி முகாம்களில் அல்லல்படும் முஸ்லிம்களின் துயரங்களை உலகிற்கு சொல்கின்றார். அம்மக்களின் கண்ணீரை காட்சிப் படுத்துகிறார். அவர்களுக்காக பேச, தமிழ்ச் சூழலில் யாருமே முன் வராத நிலையில், பொது அரங்கில் துணிச்சலாக குரல் எழுப்புகின்றார். ஒரு மனித உரிமைப் போராளி என்ற வகையில் தமது தார்மீக கடமையை அவர் ஆற்றிவருகின்றார். இதில் என்ன தவறு இருக்கிறது என்பதுதான் அ.மார்க்சை விமர்சிக்கும் தோழர்களை நோக்கி நாம் எழுப்பும் கேள்வி.

அ.மார்க்சை மூர்க்கமாக எதிர்த்து, அவரைப் பேச விடாமல் தடுத்ததில் "நாம் தமிழர்" இயக்கத்தினர் ஈடுபட்டதாக அறிகின்றோம். ஒடுக்கப்படும் தமிழர்களின் உரிமைகளுக்காக போராடி வரும் தோழர் சீமானின் 'தம்பிகள்' அப்படியான செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என்றே நம்புகின்றோம். அப்படி அவர்கள் ஈடுபடுவது உண்மை என்றால் அது சீமான் பேசி வருகின்ற பெரியாரிய கொள்கைக்கே எதிரானது என்பதுதான் எமது தோழமையான கருத்து.

தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லை என்றும், புலிகளை எதிர்த்துப் பேச காங்கிரஸ் காரனுக்கு உரிமை இருக்கும் போது, புலிகளை ஆதரித்துப் பேச தமக்கு உரிமை இல்லையா என்றும் கலைஞரைப் பார்த்து கேள்வி எழுப்புகின்ற தோழர் சீமானுக்கு, அதே கருத்து சுதந்திரம் பேராசிரியர் அ.மார்க்சுக்கும் உண்டு என்கிற நியாயம் மட்டும் புரியாமல் இருப்பது ஏன் என்பதுதான் நமக்கு புரியவில்லை.அ.மார்க்ஸ் பேசும் கூட்டங்களில் எல்லாம் புகுந்து ரகளை செய்து இடையூறு ஏற்படுத்தும் அவர்கள், புலிகளை எதிர்த்து மிக மோசமாகப் பேசி வரும் காங்கிரஸ்காரர்களின் கூட்டங்களில் புகுந்தும் இதே வகையான ரகளைகளை செய்வார்களா என்பது தான் நடுநிலையாளர்களின் கேள்வி.

அ.மார்க்ஸ் அதிகாரப் பின்புலம் அற்றவர் என்பதனாலேயே அவரின் கூட்டங்களுக்கு சென்று கலகம் புரிவது எந்த வகை நியாயம். புலிகளுக்கு எதிரான கருத்தியலைப் பரப்பி வரும் இளங்கோவன், ப.சிதம்பரம் உள்ளிட்ட ஆளும் அதிகார வர்க்கத்தின் கூட்டங்களுக்கு சென்று கேள்வி கேட்கவும், ரகளை செய்யவும் வலிமை அற்றவர்கள், அ.மார்க்சைப் போன்ற எளிய மனிதர்களிடம் சென்று மோதிப் பார்ப்பது எந்த வகை வீரம்?

புலிகளை கடுமையாக எதிர்த்து வரும் காங்கிரஸ் காரர்களைக் கூட, கருத்தால் எதிர் கொள்ளும் "நாம் தமிழர்" இயக்கத்தினர், புலிகளின் தவறுகளை சுட்டிக்காட்டும் அ.மார்க்ஸ் மீது மோசமாகப் பாய்வது கண்டனத்திற்குரிய ஒன்று.

புலிகளை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களாகப் பாவித்து, அவர்களை எதிர்த்தவர்களை எல்லாம் தமிழரென்றும் பாராமல் மூர்க்கத்தனமாகப் பாய்ந்து குதறியது தான் ஈழத்தின் பின்னடைவுக்கு மிக முக்கிய காரணம். ஈழத்தில் சாதி வெறியை ஒழிக்காமல் போராட்டத்தை முன்னெடுத்ததும், மலையகத் தமிழர்கள் மற்றும் தமிழ் முஸ்லிம்களையும் இணைத்த, அவர்களின் உரிமைகளுக்கும் அபிலாசைகளுக்கும் உத்தரவாதமளித்த தனி ஈழத்தை கட்டமைக்க மறுத்ததும் தான் புலிகளின் வீழ்ச்சிக்கு பிரதான காரணம்.இது பற்றி எல்லாம் பேசினால், அது புலிகளுக்கு எதிரானது என்ற கற்பிதம் புலி ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் கற்பிதம் உடையாத வரை இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படாது.

2002 - ஆம் ஆண்டு இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு, சமாதானம் தழைத்திருந்த அந்த அமைதியான சூழலில், சுதந்திரமாக இலங்கையை சுற்றி வந்தவன் என்ற முறையில், அப்போதே புலிகளுக்கும்- முஸ்லிம்களுக்கும் இடையேயான பிரச்சினைகள் குறித்த உரையாடலை தமிழ் நாட்டில் தொடங்கினோம்.

அப்போது வெளிவந்து கொண்டிருந்த இதழ் ஒன்றில் இது குறித்தெல்லாம் விரிவாக அலசி உள்ளோம். தமிழகத்தில் முஸ்லிம்களின் தோழமை சக்தியாகவும் அதே நேரம் தீவிர புலி ஆதரவாளர்களாகவும் செயல்படும் தலைவர்களையும், சிந்தனையாளர்களையும் சந்தித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.பாவலர் இன்குலாப், சுப வீரபாண்டியன், பழ நெடுமாறன், தோழர் தியாகு என பல தரப்பினரையும் சந்தித்து, முஸ்லிம்களை அடித்து துரத்திய புலிகளின் செயல் குறித்து கருத்துக்களை கேட்ட போது, பலரும் அது தவறு என்பதை ஒப்புக் கொண்டனர்.

தவறு என்றால் அதை ஏன் புலிகளுக்கு நீங்கள் சுட்டிக்காட்டவில்லை என்று திருப்பிக் கேட்ட போது, சிங்கள பேரினவாதத்தை எதிர்த்து களத்தில் நின்று கொண்டிருப்பவர்களை கேள்விகளால் காயப்படுத்த விரும்பவில்லை என்று பதில் அளித்தனர்.

அப்போது புலிகள் களத்தில் நின்றதனால் இது பற்றிக் கேட்கவில்லை. இப்போது புலிகள் களத்தில் இல்லாததனால் அது பற்றி கேட்கக் கூடாது என்று கூறுகின்றனர். அப்படி என்றால் புலிகளின் தவறுகளை எப்போது தான் கேள்வி கேட்பது?

புலிகளை விமர்சனத்துக்கு உட்படுத்தி, புலி ஆதரவாளர்கள் தம்மை சுய பரிசோதனை செய்து கொள்ளாத வரை அவர்களின் எந்தப் போராட்டமும் வெற்றி பெறாது.கடந்த கால நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு ஒரு புதிய அணுகு முறையை கையில் எடுக்கும் போதுதான், மறுமலர்ச்சி சாத்தியமாகும்.

தோழர் சீமான் தமிழ் இனத்தின் மீள் எழுச்சிக்காக களமாடிக் கொண்டிருப்பவர். அப்படிப்பட்டவர் புலிகளைப் போலவே பிரச்சனைகளை அணுகினால் வீழ்ச்சிதான் விடையாக கிடைக்கும்.

[எழுத்தாளர் மீனா தொகுத்த 'அ.மார்க்ஸ் - சில மதிப்பீடுகள்' என்னும் நூலுக்கு ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரை]

சினிமா ஹராமா?

ண்மையில் அம்பேத்கர் திரைப்படத்தைப் பார்த்தேன்.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாய் ஒலித்த புரட்சியாளர் அம்பேத்கர்,
தன் வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவுகளிலும் சந்தித்த நெருக்கடிகள், அவமானங்கள், இழப்புகள் ஆகியவற்றையும்,
எல்லா இடர்களையும் எதிர் கொண்டு அவர் எழுந்து நின்ற வீர வரலாற்றையும் துல்லியமாகப் பதிவு செய்திருந்தனர்.

இந்தியாவின் தலைசிறந்த திரைக்கலைஞரான 'மம்முட்டி' அம்பேத்கராகவே உருமாறியிருந்தார்.
அம்பேத்கரின் சாயலை ஒத்திருந்த அவரது முகத் தோற்றமும், உடல் மொழியும் அச்சு அசலாக அம்பேத்கரைப் பார்ப்பது போலவே இருந்தது.

ஒரு காட்சியில் கூட மம்முட்டி என்ற நடிகர் நம் நினைவுக்கு வராத அளவுக்கு, அம்பேத்கரை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்திய அவரது கடும் உழைப்பும், நடிப்புத் திறனும் மகத்தானது; போற்றுதலுக்குரியது.

ஆனால், படத்தின் காட்சியமைப்பில் குறிப்பாக,அதன் தமிழ் மொழியாக்கத்தில் முஸ்லிம் வெறுப்பு அப்பட்டமாகவே வெளிப்படுகிறது. கூர்ந்து கவனித்தால் அது திட்டமிட்டே திணிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.

வட்டமேசை மாநாட்டில் பேசும் போதும், காந்தியடிகளுடன் வாதம் செய்யும் போதும், பிரிவினை கோரும் ஜின்னாவை சந்திக்கும் போதும் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை அம்பேத்கர் பதிவு செய்வதைப் போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்தியச் சூழலில், குறிப்பாக தமிழகத்தில் தலித்துகளும், முஸ்லிம்களும் இணைந்து அரசியல் சக்தியாக வடிவம் பெறுவதை பொறுத்துக்கொள்ள முடியாத ஆதிக்க சக்திகள், முஸ்லிம்களிடமிருந்து தலித்துகளையும், தலித்துகளிடமிருந்து முஸ்லிம்களையும் பிரிக்கின்ற சூழ்ச்சியைக் கையாண்டு வருகின்றனர். அத்தகைய சூழ்ச்சியின் நீட்சிதான் அம்பேத்கர் படத்திலும் எதிரொலிக்கிறது.

அம்பேத்கரை முஸ்லிம்களுக்கு எதிரானத் தலைவராக சித்தரிக்கும் செயலை இந்துத்துவ சக்திகள் நீண்ட காலமாக செய்து வருகின்றனர்.

அம்பேத்கர் மீது முஸ்லிம்களுக்கு வெறுப்பு ஏற்படவும், முஸ்லிம்களைப் பற்றி தலித்துகளிடம் தவறான எண்ணம் பரவவும் பல்வேறு அவதூறுகளை கட்டவிழ்த்து விடுகின்றனர். எந்தக் காலத்திலும் இரண்டு சமூகங்களும் சேர்ந்துவிடாமல் இருக்க, என்னென்ன வழிமுறைகள் உண்டோ அவை அனைத்தையும் அவர்கள் கையாளுகின்றனர்.

அம்பேத்கரை அரசியல் நிர்ணய சபைக்கும், வட்டமேசை மாநாட்டிற்கும் அனுப்பி வைத்து அழகு பார்த்த சமூகம் முஸ்லிம் சமூகம். ஆனால், அந்த வரலாற்றை மறைத்து விட்டு, வட்டமேசை மாநாட்டில் சென்று முஸ்லிம்களுக்கு எதிராக அம்பேத்கர் பேசுவதுபோல படத்தில் காட்சியமைக்கப் பட்டிருக்கிறது.

பாக்கிஸ்தான் பிரிவினையை ஆதரித்து முதன்முதலில் புத்தகம் எழுதியவர் அம்பேத்கர்.
ஆனால், ஜின்னாவை சந்தித்து பாக்கிஸ்தான் பிரிவினைக்கு எதிராக அம்பேத்கர் பேசுவது போல சித்திரிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கும், சீக்கியர்களுக்கும் இருப்பது போல எங்களுக்கும் உரிமைகளைத் தாருங்கள் என்று ஒரு முன்னுதாரணத்தைச் சுட்டிக்காட்டி தலித்துகளுக்காக கோரிக்கை வைத்தவர் அம்பேத்கர். ஆனால், 'முஸ்லிம்களுக்கு மட்டும் சலுகை காட்டுகிறார்' என்று காந்தியை அம்பேத்கர் விமர்சிப்பது போல படத்தில் காட்சியமைக்கப் பட்டிருக்கிறது.

முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கருக்கு சில விமர்சனங்கள் இருந்தது உண்மை. ஆனால் அதை விமர்சனமாகப் பதிவு செய்யாமல், வரலாற்றுத் திரிபு செய்து அவரை முஸ்லிம் விரோதியாக சித்தரிக்கும் போக்கு இங்கே தொடர்கிறது.

அம்பேத்கர் படத்தில்தான் இப்படி என்றால்...சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த பெரியார் படத்திலும், அதற்கு முன்னர் வெளிவந்த காமராஜர் படத்திலும் கூட முஸ்லிம்களின் நிலை இருட்டடிப்பு செய்யப்பட்டே இருந்தது. காமராஜர் படத்தில் அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த எல்லா முக்கியச் சம்பவங்களும் மிக அழகாகத் தொகுக்கப்பட்டிருந்தன. காமராஜரின் எளிமையையும், மக்கள் நலன் சார்ந்த அவரது திட்டங்களையும், டெல்லி அரசியலில் அவர் செலுத்திய ஆளுமையையும், அவரது சமகாலத் தலைவர்களுடனான அவரது உறவையும் தெளிவாக படம்பிடித்திருந்தனர்.

ஆனால், காமராஜரின் அரசியல் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய குடியாத்தம் இடைத் தேர்தலில், முஸ்லிம் லீக்கின் ஆதரவுடன் அவர் வெற்றி பெற்றது குறித்து படத்தில் எந்தப் பதிவும் இல்லை. காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலைத் தீவிரமாக முன்னெடுத்தபோதும், காமராஜரின் வேண்டுகோளை ஏற்று முஸ்லிம் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அவருக்கு ஆதரவாகத் திருப்பிய காயிதே மில்லத் பற்றி எந்தக் காட்சியும் இல்லை. 'வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் முஸ்லிம் வாக்குகள் கிடைக்காமல் போயிருந்தால் நான் தோற்றுப்போயிருப்பேன்' என்று காயிதே மில்லத்தின் கரம் பிடித்து காமராஜர் நன்றி கூறிய வரலாறு, அந்தப் படத்தில் இடம் பெறவே இல்லை.

கலைஞர் அரசின் மானியத்துடன், கி.வீரமணியின் திராவிடர் கழகத்தால் தயாரிக்கப்பட்ட 'பெரியார்' திரைப்படத்திலும் இந்த அவலம் தொடர்ந்தது.

திராவிட இயக்கத்திற்கும், தமிழக முஸ்லிம்களுக்குமான உறவை வார்த்தைகளில் விவரித்து விட முடியாது. பெரியாரின் பகுத்தறிவுப் பிரச்சாரமும் இஸ்லாமிய நேசமும் முஸ்லிம்களிடையே மிகப்பெரும் தாக்கத்தையே ஏற்படுத்தியிருந்தது. முஸ்லிம்களின் நிகழ்ச்சிகளிலும், மீலாது சொற்பொழிவு மேடைகளிலும் பெரியார் சிறப்பு அழைப்பாளரானார். அங்கே அவர் முஸ்லிம்களின் அரசியல் பாதுகாப்பு குறித்து முழங்கினார். அது குறித்து அவரது குடியரசு ஏட்டிலும் எழுதினார்.

பெரியார் வழிவந்த அண்ணாவும், கலைஞரும் முஸ்லிம்களுடனான உறவை வலுப்படுத்திக் கொண்டனர். நீடித்து நிலைத்த அந்த உறவு அரசியல் அரங்கில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், இவை பற்றியெல்லாம் விளக்குகின்ற ஒரு சிறு காட்சி கூட பெரியார் படத்தில் இல்லை.

'இன இழிவு நீங்க இஸ்லாமே அருமருந்து' என்று மேடைகள் தோறும் முழங்கினார் பெரியார். மதமாற்றத்தை ஆதரித்து தீவிர பிரச்சார இயக்கத்தை முன்னெடுத்தவர் பெரியார். மீலாது விழாக்களில் பங்கேற்று 'நபிகளாரின் சிந்தனைகளும், திராவிட இயக்க சிந்தனைகளும் ஒரே சிந்தனைகளே' என்று வெளிப்படையாக அறிவித்தவர் தந்தை பெரியார். அவரது இந்த முழக்கங்கள் மருந்துக்குக் கூட அந்தப் படத்தில் இடம் பெறவில்லை.

மிக முக்கியமாக , காயிதே மில்லத் உடனான பெரியாரின் உறவு முழுவதுமாக அப்படத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தது . காயிதே மில்லத் இறந்தபோது புதுக்கல்லூரியில் வைக்கப் பட்டிருந்த அவரது உடலைப் பார்க்க, முதிர்ந்த நிலையிலும் மூத்திரச் சட்டியைக் கையில் ஏந்தியவாறு ஓடோடி வந்தவர். 'தம்பி போயிட்டீங்களா' என்று குமுறிக் கொண்டே வந்த அவர், 'நான் போயி இவரு வாழ்ந்திருக்கக் கூடாதா' என்று குலுங்கினார். உணர்வுப் பூர்வமான அந்த உறவு குறித்து பெரியார் படத்தில் எந்தக் காட்சியும் இல்லை.

பெரியார் படத்தில் ராஜாஜி வருகிறார்; அண்ணா வருகிறார்; கலைஞர் வருகிறார்; வீரமணி வருகிறார்.
ஆனால் கடைசி வரை காயிதே மில்லத் வரவே இல்லை.
தலைவர்களை புதிய தலைமுறைக்கு நினைவூட்டும் வகையில் அரசு அஞ்சல் தலைகளை வெளியிடுகிறது. காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் அஞ்சல் தலைகள் வெளியிடப் பட்டுள்ளன. காயிதே மில்லத்தின் அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் காமராஜரின் வரலாறும், பெரியாரின் வரலாறும், அம்பேத்கரின் வரலாறும் திரைப்படங்களாக எடுக்கப்பட்டு விட்டன.
காட்சி வடிவில் பதிவு செய்யப்படாத, எஞ்சிய ஒரே ஆளுமை நம் காயிதே மில்லத் மட்டும் தான்.
அவர் அவரது சமகாலத் தலைவர்களைப் பற்றிய படத்திலும் இல்லை; அவரைப் பற்றிய படமும் இல்லை.

காட்சி ஊடகத்தை, குறிப்பாக சினிமாவை முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகள் கைப்பற்றி வைத்திருப்பதும், அத்துறை சார்ந்த புரிதல் முஸ்லிம்களிடம் இல்லாமல் போனதுமே இத்தகைய அவலத்திற்கு காரணம்.

காட்சி ஊடகத்தில் முஸ்லிம்கள் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்து நான் தொடர்ச்சியாக எழுதியும் பேசியும் வருகிறேன். சினிமாவின் அசுர பலத்தையும், பொதுச்சமூக மத்தியில் அது ஏற்படுத்துகின்ற தாக்கத்தையும், சினிமாவில் முஸ்லிம்கள் சித்தரிக்கப்படும் விதத்தையும், சினிமாத்துறை குறித்த முஸ்லிம்களின் சிந்தனைப் போக்கையும் பட்டியலிட்டு, அத்துறையில் பங்களிப்பு செலுத்த முஸ்லிம்கள் தயாராக வேண்டும் என்று நான் பேசுகிற போது எல்லோரும் என்னை ஏற இறங்கப் பார்க்கின்றனர்.

அப்படிப் பார்ப்பவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் என்னிடம் கேட்கிற ஒரே கேள்வி..'நாம் எப்படி சினிமா எடுக்க முடியும்?' என்பது தான்.

சினிமாவைப் புறக்கணிப்பதற்கு முஸ்லிம்கள் சொல்லும் முக்கியக் காரணம் 'அது ஒழுக்கக் கேடுகள் நிறைந்த சாக்கடை. அந்தச் சாக்கடையில் நாமும் சிக்கி விடக் கூடாதே' என்பதுதான். முஸ்லிம்களின் இந்த வாதம் பலவீனமான வாதமாகும்.

மீடியாக்களின் பிதாமகனாகவும், வெகுமக்களின் சுவாசமாகவும் விளங்குகின்ற சினிமாவை விட்டு நாம் விலகி நிற்கின்றோம் என்றால், நமது வரலாறுகளை; நமது பண்பாட்டுக் கூறுகளை; நமது கலைகளை; நமது பங்களிப்புகளை; பொதுச்சமூக மத்தியில் எடுத்துச் சொல்வதில் இருந்து நாம் விலகி நிற்கின்றோம் என்றுதான் பொருள். இதனால் இழப்பு யாருக்கு என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

சினிமா ஹராமா, ஹலாலா என்னும் மனக்குழப்பம் இன்னும் இங்கே தீர்ந்தபாடில்லை. முஸ்லிம் அறிவு ஜீவிகள் மத்தியில் கூட இந்த நிலையே நீடிக்கிறது. முஸ்லிம்களை கொச்சைப் படுத்தி வெளிவரும் சினிமாக்கள் பற்றி விமர்சனக் கட்டுரை எழுதினால் கூட எங்கே 'சினிமா விமர்சனம்' என்று கூறி சலசலப்பு ஏற்பட்டு விடுமோ என்ற தயக்கம் முஸ்லிம் பத்திரிகைகள் மத்தியில் இன்னுமிருக்கிறது.
இதெல்லாம் அறியாமையின் வெளிப்பாடே தவிர வேறில்லை.

சினிமா ஒரு சக்தி வாய்ந்த ஊடகம். அது ஒரு ஆயுதம். அது மனித அறிவின், ஆற்றலின் அழகிய வெளிப்பாடு. அப்படிப்பட்ட சினிமா எப்படி ஹராமாக இருக்க முடியும்? நிச்சயமாக இங்கே சினிமா ஹராமானதல்ல. சினிமாவில் காட்டப்படுவது வேண்டுமெனில் ஹராமாக இருக்கிறது என்று சொல்லலாம்.

தவறானவர்களின் கையில் ஒரு சரியான பொருள் சிக்கியிருக்கிறது என்றால், அதை மீட்டு சரியான வகையில் பயன்படுத்த வேண்டும். அதுதான் தர்மம். அந்த தர்மத்திலிருந்து முஸ்லிம்கள் ஏன் விலகி நிற்கின்றார்கள்?

சினிமா என்னும் ஊடகத்தை முஸ்லிம்கள் புறக்கணித்துக் கொண்டிருப்பதால் ஏற்படும் இழப்புகள் அளவிட முடியாதவை. கமலஹாசன் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த 'உன்னைப் போல் ஒருவன்' திரைப்படம், முஸ்லிம்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய படமாகும். முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டி, அவர்களுக்கு விசாரணைகள் அற்ற கொடூரமான தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்திய படம்.

அந்தப் படம் வெளியானவுடன் கமலுக்கு எதிரான விமர்சன அம்புகள் புயலாய்ப் புறப்பட்டன.
பகுத்தறிவுவாதியான கமல்; முஸ்லிம்களின் தோழனாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் கமல்; சமரசமற்ற கலைஞனாக தன்னை முன்னிறுத்தும் கமல், இப்படியொரு அநீதியைச் செய்யலாமா? எனும் கேள்விகள் வெடித்துக் கிளம்பின.

முஸ்லிம்களை கொச்சைப்படுத்தி எடுக்கப்படும் சினிமாக்களில் 'உன்னைப் போல் ஒருவனும்' ஒன்றே தவிர அதுவே தொடக்கம் அல்ல. மணிரத்னம் 'ரோஜா' எடுத்த போதும், பின்னர் அது 'பம்பாய்' என்று பரிணாமம் பெற்ற போதும், விஜயகாந்தின் படங்கள் முஸ்லிம்களைக் குறி வைத்துக் குதறிய போதும், அர்ஜுனின் படங்கள் முஸ்லிம்கள் மீது வெறுப்பை உமிழ்ந்த போதும் முஸ்லிம்களிடமிருந்து உணர்ச்சி அலைகள் பொங்கி எழுந்திருக்கின்றன. முஸ்லிம்களைக் கேவலப்படுத்தி படங்கள் வெளிவருவதும், அவற்றுக்கு முஸ்லிம்கள் எதிர்வினை யாற்றுவதும் வழமையான ஒன்றாகிவிட்டது.

சினிமா ஒரு வலிமையான ஆயுதம் என்பது புரிகிறது. அந்த சினிமாவில் தம்மை கொச்சைப் படுத்துகின்றனர் என்பதும் தெரிகிறது. அப்படி கொச்சைப் படுத்துவதன் மூலம் வெகுமக்களிடமிருந்து தம்மை அன்னியப் படுத்தும் சதியும் கண் முன்னே விரிகிறது. அப்படியிருந்தும் முஸ்லிம்கள் ஏன் சினிமாவைப் பற்றி சிந்திக்கும் மனநிலைக்குக் கூட இதுவரை வரவில்லை?

'உன்னைப் போல் ஒருவன்' வெளியான போது கமலஹாசனை சந்தித்த சில முஸ்லிம் நண்பர்கள், படம் குறித்த தங்களின் விமர்சனங்களை அவரிடம் எடுத்துரைத்தனர். கமல் உடனான அந்தச் சந்திப்புக்கு இயக்குநர் அமீர் ஏற்பாடு செய்திருந்தார். இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், கமலைச் சந்தித்து முறையிடக் கூடிய அந்த வாய்ப்பு கூட சினிமாவில் அமீர் என்று ஒருவர் இருப்பதனால் தான் சாத்தியமானது. அமீரும் இல்லையெனில், கமலைக் கண்டித்து போஸ்டர் ஒட்டுவதோடு நம் கடமை முடிந்து போயிருக்கும்.

பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது நரசிம்மராவைச் சந்தித்து அவரைக் கேள்விக் கணைகளால் துளைத்தவர் கமல். மணிரத்னம் 'ரோஜா, பம்பாய்' என்று படமெடுத்தபோது முஸ்லிம்களின் பக்கம் நின்றவர் கமல். அப்படிப்பட்ட கமல்தான் காலச் சுழற்சியில் மணிரத்னத்தை விட மோசமானவராக மாறி, உன்னைப் போல் ஒருவனை எடுத்து முஸ்லிம்களை குதறினார்.
'முஸ்லிம்களுக்கு ஆதரவான குரல்' என்று யாரை நினைத்தோமோ, அந்தக் குரல்களே நம் குரல்வளையை நெறிக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. இனி, எந்தக் களத்திலும் யாரை நம்பியும் பயனில்லை என்பதை காலம் 'துறை வாரியாக' நமக்கு உணர்த்திக்கொண்டிருக்கிறது. படிப்பினை பெறவும், மீள எழவும், இனியும் நாம் தவறினால் அதை விட அவலம் வேறு இருக்க முடியாது.

சினிமாவில் நமக்காக யாரும் பேசாதபோது, பேசுகிற ஒரு சிலரும் மோசமானவர்களாக மாறி நம்மை வஞ்சிக்கிறபோது, நமக்கான குரலாக நாம்தான் ஒலிக்க வேண்டும். காலம் கடத்தாமல் சினிமா குறித்து முஸ்லிம்கள் பரிசீலனை செய்ய வேண்டும் என்பதே இக்கட்டுரையின் பிரதான நோக்கம்.

சுமார் மூன்று மணி நேரம் தமது எல்லா அலுவல்களையும் ஒதுக்கிவைத்து விட்டு, செல்போனைக் கூட செயலிழக்கச் செய்துவிட்டு, கவனம் முழுவதையும் ஒருமுகப்படுத்தி, சுற்றத்தோடும் நட்போடும் அலையலையாய் மக்களைத் திரையரங்குகள் நோக்கி அணிதிரள வைக்கும் வல்லமை வேறு எந்த ஊடகத்திற்கும் கிடையாது. பூட்டிய இருட்டு அரங்கத்திற்குள் விரியும் வெண்திரையில் என்ன காட்டப் படுகிறதோ அதுதான் செய்தி; அதுதான் சமூக நியதி என்றாகிவிட்டது.

வடிவேலு எனும் நகைச்சுவை நடிகர், திரையில் வாய்திறந்து சொல்வதெல்லாம் தமிழ்நாட்டு மக்களின் பேச்சு வழக்காக மாறிப்போகின்ற அதிசயம் நிகழ்ந்து வருவதை நாம் அனுபவ ரீதியாக கண்டு வருகிறோம். நம் வீட்டு பிஞ்சுக் குழந்தைகள்கூட வடிவேலுவின் டயலாக்குகளைப் பேசி மகிழ்கின்றன. தீவிர மார்க்கப் பற்றுள்ள மூத்த ஆலிம் ஒருவருடன் ஒருமுறை பேசிக் கொண்டிருந்த போது, 'ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ' என்று பேச்சு வாக்கில் சொல்லிச் சிரித்தார். 'எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாண்டா.. இவன் ரொம்ப நல்லவன்டா' என்று பள்ளிவாசல் வராந்தாவில் நின்று கொண்டு இளைஞர்கள் ஒருவரையொருவர் கலாய்க்கின்றனர். இதையெல்லாம் நாம் எப்படி எடுத்துக்கொள்வது? பள்ளிவாசல் வராந்தா வரையிலும் வடிவேலுவைக் கொண்டு வந்துவிட்டது எது என்பதை ஆராய்ந்தால் சினிமா எத்தகைய சக்திமிக்க ஆயுதம் என்பது புலப்படும்.

''திரைப்படத்தின் முன்னேற்றம் பிரதி தினம், வாரமென்று நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.ஒரு திரைப்படத்தை லட்சக்கணக்கானோர் பார்க்கிறார்கள். வேறு எந்தக் கலைக்குமே இந்த அளவிலான பரந்து பட்ட வெளிப்பாட்டிற்கான சாத்தியப்பாடுகள் இல்லை. இது திரைப்படத்திற்கேயான மிகப்பெரிய சாதகமான அம்சமும், அனுக்கிரகமுமாகும்'' என்கிறார், உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர்
அடூர் கோபால கிருஷ்ணன்.
Adoor Gopalakrishnan

''இந்தியாவிலேயே அதிகமாக திரை அரங்குகள் இருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு. அதிகமான சினிமா பார்ப்பவர்கள் தமிழ்நாட்டு மக்கள்'' என்கிறார் திரைப்பட ஆய்வாளர் தியடோர் பாஸ்கரன்.

''தமிழகத்தில் தொழிற்சாலைகளைவிட திரைஅரங்குகள் தான் அதிகம் உள்ளன. இந்தியாவின் மொத்த திரைஅரங்குகளில் சுமார் 25 % க்கும் மேலான அரங்குகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. ஒரு திரையரங்கம் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்தை எடுத்துக் கொள்கிறது. ஒரு திரைஅரங்கில் நான்கு காட்சிகளில் சுமார் 3000 பேர் தங்கள் பொழுதை செலவிடுகின்றனர்'' என்கின்றன புள்ளிவிபர ஆய்வுகள்.

திரை அரங்கிற்கு உள்ளே மட்டுமின்றி திரை அரங்கிற்கு வெளியேயும் சினிமாவின் ஆதிக்கமே நிலவுகிறது. செய்தி ஊடகங்கள் அனைத்தும் சினிமாவை மைய்யப்படுத்தியே இயங்குகின்றன. எந்தப் பத்திரிகையைப் படித்தாலும், எந்தத் தொலைக்காட்சியைப் பார்த்தாலும் சினிமா,சினிமா,சினிமாவே தான். நடிகர் நடிகைகளின் பேட்டிகள், இயக்குனரின் அனுபவங்கள், இசை வெளியீட்டு நிகழ்வுகள், விருது வழங்கும் விழாக்கள், பாடல்கள், காமெடிகள், திரை விமர்சனங்கள், நட்சத்திரங்களின் வீட்டு விஷேசங்கள், திரைக் கலைஞர்களின் அரசியல் நடவடிக்கைகள் என சினிமாவைச் சுற்றியே இன்றைய மின்னணு மற்றும் அச்சு ஊடகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் தலைமைப் பொறுப்புக்கு வரவேண்டுமெனில் திரைத்துறையில் நல்ல அனுபவமும், அங்கீகாரமும் இருந்தால் போதும் என்பதுதான் தம்மை ஆள்பவர்களுக்கு தமிழக மக்கள் நிர்ணயித்து வைத்திருக்கும் ஒரே தகுதி.

தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்குத்தான் பெரும் அளவில் ரசிகர் மன்றங்கள் திறக்கப்பட்டன. பின்னர் அது அரசியல் சக்தியாக வடிவம் பெற்றது. கடந்த நாற்பது ஆண்டுகளாக தமிழகத்தில் முதலமைச்சர்களாக சினிமாக்காரர்களே வர முடிகிறது. தேர்தல் வெற்றிக்கு நடிகர்களின் ஆதரவு தேவைப் படுகிறது.

ஆட்சியையே பிடிக்க உதவும் ஆயுதம் சினிமா என்றால், அதன் அசுர பலத்தை அளவிட வேறு உதாரணங்கள் தேவையில்லை. அத்தகைய சக்தி வாய்ந்த ஊடகமான சினிமாவில் தமிழக முஸ்லிம்களின் நிலை என்ன என்பது ஆய்வுக்குரிய விசயம்.
Aloor Shanavas with 'Kalaimamani' SM.Umar

தமிழ் சினிமா நடிகர்களை வியட்நாம் மொழி பேசவைத்த அதிசய மனிதர் கலைமாமணி எஸ்.எம். உமர் அவர்களில் தொடங்கி, பருத்திவீரன் மூலம் தமிழ் சினிமா உலகத்தையே தன் பக்கம் திருப்பிய இயக்குநர் அமீர் வரை, ஏராளமான முஸ்லிம்கள் சினிமாவில் ஆளுமை செலுத்துகின்றனர். ஆனால், உமரைப் போலவும் அமீரைப் போலவும் வெளிப்படையாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் வெகு சிலரே.
Aloor Shanavas with Director Ameer

இவர்களைத் தவிர, தமது அடையாளத்தை வெளிக்காட்டுவதற்கு கூட அஞ்சி பெயரை மாற்றிக்கொண்டு இயங்கும் முஸ்லிம்கள் பல நூறுபேர் இருக்கிறார்கள். தங்களின் உண்மையான பெயரைச் சொல்லக் கூட தயங்குபவர்கள் எப்படி கருத்தியல் ரீதியாக முஸ்லிம்களின் குரலாக ஒலிப்பார்கள்? அப்படிப்பட்டவர்கள் சினிமாவில் எத்தனை ஆயிரம் பேர் இருந்தாலும் அதனால் சமூகத்திற்கு துளியும் பயனில்லை.

முஸ்லிம் சமூகத்தின் அசலான முகத்தைப் புரிந்தவர்களை, திரைமொழி அறிந்தவர்களாக மாற்றும் போதுதான் நம்மைப் பற்றிய சினிமாவின் தவறான சித்தரிப்புகளை உடைத்தெறிய முடியும்.

சினிமா என்றாலே நடிகையைக் கட்டிப்பிடித்து குத்தாட்டம் போடுவது; குடித்து விட்டு அடிதடி செய்வது என்றே நாம் கருதுகிறோம். நாம் பார்கின்ற; நமது சூழலில் வெளிவருகின்ற சினிமாக்களை வைத்து இத்தகைய முடிவுக்கு நாம் வருகின்றோம். ஒருவகையில் இதுவும் பிழையான பார்வையே. உலகைக் கலக்கிய உன்னத சினிமாக்களைப் பற்றிய ஆழமான புரிதலும் விசாலமான பார்வையும், அவை பற்றிய குறைந்தபட்ச அறிமுகமும்கூட நமக்கு இல்லாததால் ஏற்பட்ட விளைவு இது.

இன்று உலகம் முழுவதும் பேசப்படுகின்ற ஈரானிய சினிமாக்கள் நமக்கு வழிகாட்டியாய் இருக்கின்றன. ஈரானில் கேமரா என்னும் கருவியைத் தூக்கிக்கொண்டு ஈரானியப் பெண்கள் சினிமாக்களை எடுக்கின்றனர். தமது படங்களின் மூலம் ஏகாதிபத்தியத்திற்கும், உலகமயத்திற்கும் எதிராகப் போர் தொடுக்கின்றனர். உலகப்பட விழாக்களில் ஈரானியப் படங்கள் மிக எளிதாக விருதுகளை குவித்து வருகின்றன. ஈரானிய சினிமா என்றாலே இப்போது கலைஉலகம் சற்று மிரட்சியோடுதான் பார்க்கிறது.
Iranian Film Makers

யதார்த்தமான வாழ்க்கையை, ஏழையின் வலியை, காதலின் ஆழத்தை, குழந்தையின் கனவை, முதலாளித்துவத்தின் ஆதிக்கத்தை, ஏகாதிபத்தியத்தின் கொடூரத்தை என ஒவ்வொன்றையும் கலைப் பூர்வமாக உலகின் முன்னால் விரிக்கும் ஈரானியர்கள் மீது இன்று உலகின் கவனம் திரும்பியிருக்கிறது.
ஈரானியர்களுக்கு சாத்தியமானது, நமக்கு சாத்தியமாகாதா?

இந்துமதக் கோட்பாடுகளை மைய்யப் படுத்திய பக்திப்படங்களும், மூட நம்பிக்கைகளை விதைக்கும் புராணப் படங்களுமே தமிழ் சினிமா என்றிருந்த நிலையில், பகுத்தறிவுக் கருத்துக்களை விதைத்து தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றினார்கள் எம்.ஆர்.ராதாவும், என்.எஸ்.கிரிஷ்ணனும்.

வேதமந்திரங்கள் முழங்கிய தமிழ்த்திரையில் தங்களின் கூர்மையான எழுத்துக்களின் மூலம் மிகப்பெரும் வசனப்புரட்சிக்கு வித்திட்டனர் அண்ணாவும், கலைஞரும். திராவிட இயக்க கருத்துக்களைப் புகுத்தி, திரைத்துறையில் பலமிக்க சக்தியாக பரிணாமம் பெற்று, அதன்மூலம் தமிழகத்தின் ஆட்சியையே பிடிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர்கள் அவர்கள்.
அண்ணாவுக்கும், கலைஞருக்கும் சாத்தியமானது, நமக்கு சாத்தியமாகாதா?

இயற்கை, ஈ, பேராண்மை போன்ற படங்களைத் தந்து, தமிழ் சினிமாவின் தனிப்பெரும் கலைஞனாக உயர்ந்து நிற்கின்றார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். 'இயற்கை' திரைப்படம் வர்க்க முரண்பாடுகளைப் பற்றி பேசுகிறது. 'ஈ' திரைப்படம் உயிரைக்காக்கும் மருத்துவத் துறையில் நடைபெறும் ஊழல்கள் பற்றியும், பன்னாட்டுக் கம்பெனிகள் இந்தியா போன்ற வளரும் நாடுகளை சோதனைக்களமாக பயன்படுத்தி வருவது பற்றியும், அவர்களின் சோதனை எலிகளாக இங்குள்ள தலித்துகளும், முஸ்லிம்களும் குறிவைக்கப்படுவது பற்றியும் பேசுகிறது.

'பேராண்மை' திரைப்படம் இட ஒதுக்கீட்டின் அவசியம் குறித்தும், முதலாளித்துவ நாடுகளின் தாக்குதல்களிலிருந்து இந்தியாவை காக்கப் போராடும் ஒடுக்கப்பட்ட சமூக இளைஞர்களின் அர்ப்பணிப்பையும் பேசுகிறது. இப்படி ஜனநாதனின் ஒவ்வொரு படங்களும் வெவ்வேறு கருத்தியலின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளன. அவர் எடுத்த மூன்று படங்களுமே முத்திரை பதித்தன. 'இயற்கை' என்கிற அவரது முதல் படமே தேசிய விருதைப் பெற்றது.
Director S.P.Jananathan

ஜனநாதன், பெரியாரிய மார்க்சிய கொள்கைகளால் ஈர்க்கப் பட்டவர். இடதுசாரி சிந்தனையாளர்.
ஏகாதிபத்திய மற்றும் இந்துத்துவ பாசிச எதிர்ப்பாளர். அவர் கூறுகிறார்...''நான் எந்தக் கருத்துக்களால் ஈர்க்கப் பட்டேனோ, அதைப் படத்தில் நேரடியாகக் கையாண்டிருக்கிறேன். சமூகத்தில் அதிகமாக ஒடுக்கப்பட்ட ஓர் இளைஞனை படத்தில் நாயகனாக வைத்திருந்தேன்.'பேராண்மை' படம் என்ன சாதித்தது என்றால், தமிழ்நாடு முழுவதும் 220 தியேட்டர்களில் தொடர்ந்து நான்கு காட்சிகளாக நன்றாக ஓடியிருக்கிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு நான்கு முறை பொதுவுடைமை அரசியலை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்திருக்கிறேன்'' என்கிறார்.

மார்க்சியக் கருத்துக்களை எடுத்தியம்பும் களமாக சினிமாவை மாற்ற முடியும் என்பதை ஜனநாதன் நிரூபித்திருக்கிறார். மக்களுக்கான சினிமாவை முன்னெடுக்கும் முயற்சியில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார். ஜனநாதனுக்கு சாத்தியமானது, நமக்கு சாத்தியமாகாதா?

'அங்காடித் தெரு' என்றொரு படம். தி.நகர் ரங்கநாதன் தெருவிலுள்ள பிரம்மாண்டமான துணிக்கடைகளில் உடலுழைப்பைச் செலுத்தி வெந்து போகும் அடித்தட்டு இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களைப் பற்றிய அற்புதமான சித்திரம். ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த இளைஞர்கள் குடும்ப வறுமையினால் துரத்தியடிக்கப்பட்டு, தி.நகர் துணிக்கடைகளில் துயரப்படும் அவலங்களைத் துல்லியமாகப் பதிவு செய்திருந்தது, அந்தப் படம்.

'அங்காடித் தெரு'வில் சில்க் ஸ்மிதாவின் கவர்ச்சி இல்லை. நமீதாவின் குத்தாட்டம் இல்லை. ஆபாசமான பாடல் வரிகள் இல்லை. முஸ்லிம் தீவிரவாதிகள் இல்லை. கிறிஸ்தவ வில்லன்களும் இல்லை. வழக்கமான தமிழ் சினிமாவின் கூறுகளை உடைத்தெறிந்துவிட்டு ஒடுக்கப்பட்டோரின் வாழ்வியலைப் படம்பிடித்திருந்தார் இயக்குநர் வசந்த பாலன்.

எந்தப் பத்திரிகைகள் மோசமானப் படங்களைத் தூக்கிக் கொண்டாடுகின்றனவோ; எந்தத் தொலைக்காட்சிகள் ஆபாசமான சினிமாக்களை ஆராதிக்கின்றனவோ; எந்த மக்கள் கேவலமான சினிமாக்களின் ரசிகர்களாக இருக்கின்றார்களோ; அந்தப் பத்திரிகைகள் தான் அங்காடித் தெருவை கொண்டாடின. அந்தத் தொலைக்காட்சிகள் தான் அங்காடித் தெருவை ஆராதித்தன.
அந்த மக்கள் தான் நூறு நாட்களைத் தாண்டி ஓட வைத்து, அங்காடித் தெருவை வெற்றிப் படமாக்கினர்.
வசந்த பாலனுக்கு சாத்தியமானது நமக்கு சாத்தியமாகாதா?

ராமன் என்னும் ஒரு புராணப்பாத்திரத்தை கதை நாயகனாக்கி, 'ராமாயணத்தை' இந்துத்துவ சக்திகள் படமாக்கியிருக்கின்றனர். அதை தொலைக்காட்சிகளில் தொடராக வெளியிடுகின்றனர்.
வரலாற்றுச் சான்றுகள் இல்லாத; வாழ்ந்ததற்கான சுவடுகளே இல்லாத; காட்சிப்பதிவுக்கான கூறுகள் அற்ற;
நடைமுறை வாழ்க்கைக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாத; பகுத்தறிவுக்குப் பொருந்தாத வெற்றுக் கற்பனைப் பாத்திரத்தையே படம்பிடிக்க முடியுமென்றால், வரலாற்று நாயகனாய் வாழ்ந்து மறைந்த பாபரை ஏன் படம் பிடிக்க முடியாது? 'பாபர் நாமா'வை ஏன் சினிமாவாக்க முடியாது? நமக்கா கதைக்குப் பஞ்சம்?

செழுமையான வரலாற்றுப் பின்னணி கொண்ட; வீரமும் தியாகமும் நிறைந்த பாரம்பரியத்தை உடைய; அளப்பெரும் பங்களிப்புகளை உலகிற்கு அள்ளித்தந்த; இழப்புகளுக்கும் இடர்களுக்கும் இலக்காகி, துடிக்கிற நம்மிடமா கதைக்குப் பஞ்சம்?

நாடறிந்த பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன், முஸ்லிம் பக்கீர்களின் வாழ்வியலை அழகாக ஆய்வு செய்துள்ளார். அவரது ஆய்வை அடிப்படையாகக் கொண்டு பக்கீர்களின் வாழ்க்கையிலிருந்து நாம் ஏன் ஒரு திரைக் கதையை தேர்வு செய்யக்கூடாது?

இயக்குநர் ஷங்கரின் படங்கள் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளையும், அவர்களைப் பழிதீர்க்கும் ஹீரோயிசத்தையும் காட்சிப் படுத்துகின்றது. ஷங்கர் தனது படங்களில் சொன்ன விசயத்தையே திரும்பத் திரும்பச் சொன்னாலும், அவர் கதையை நகர்த்தும் தன்மையிலும் காட்சியமைக்கும் உத்தியிலும் மக்களை வெகுவாக ஈர்க்கிறார். ஊழலைப் பற்றியும், லஞ்சத்தைப் பற்றியும், ஆக்கிரமிப்பைப் பற்றியும் படமெடுப்பதற்கு ஷங்கர் தேர்வு செய்யும் கதைக் களங்களை விட, நம்மிடம் மிக வலுவான கதைக்களம் இருக்கிறது.

வக்பு நிலங்கள் கபளீகரம் செய்யப்படுவது பற்றியும், அதை அபகரித்து வைத்துள்ள அதிகாரவர்க்கம் பற்றியும், வக்பு அதிகாரிகளிடம் புரையோடிப் போயுள்ள லஞ்சம் பற்றியும் எத்தனை விறுவிறுப்பான திரைக்கதையை அமைக்க முடியும்!

விசாரணைக் கைதிகளாக சிறையிலடைக்கப்பட்டு, இளமை முழுவதையும் சிறையில் இழந்து, குற்றமற்றவர்களாக விடுவிக்கப்பட்ட , இன்னும் விடுவிக்கப்படாமல் சிறையில் வாடுகிற பல நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் துயரம் மிகுந்த வாழ்க்கையையும்,
அவர்களின் துடிப்பான இளமையை சூறையாடிய இந்துத்துவ அரசியலையும், அவர்களின் குடும்பங்களின் துயர அவஸ்தைகளையும், பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் விசயத்தில் அரசுகள் நடந்துகொள்ளும் பாரபட்சத்தையும் மைய்யப்படுத்தி, திரைக்கதை எழுதத் தொடங்கினால்...மக்களை உலுக்கியெடுக்கும் பல நூறு சினிமாக்களை நம்மாலும் படைக்க முடியும்.

மேலப்பாளையத்தில் பீடி சுற்றும் முஸ்லிம்களின் வாழ்வியலையும்; வட மாவட்டங்களில் தோல் தொழிற்சாலைகளில் வியர்வை சிந்தும் முஸ்லிம்களின் வறுமையையும்; சென்னையில் சேரிகளில் வசிக்கும் அடித்தட்டு முஸ்லிம்களின் அவலங்களையும்; 'முஸ்லிம்' என்ற ஒரே காரணத்திற்காகவே வாடகை வீடு கிடைக்காமல் பெருநகர வீதிகளில் அல்லல்படுபவர்களின் துயரத்தையும்;
தகுதியிருந்தும், திறமையிருந்தும் முஸ்லிம் பெயர் இருப்பதனாலேயே வேலை கிடைக்காமல் பன்னாட்டு, இந்நாட்டு கம்பெனிகளால் நிராகரிக்கப்படும் முஸ்லிம் இளைஞர்களின் வேதனையையும் என்று... நாம் படம் பிடிப்பதற்கு அடுக்கடுக்கான கதைக் களங்கள்; ஆயிரமாயிரம் கண்ணீர் கதைகள் உள்ளன.

தமிழ் சினிமாவில் காட்டப்படும் முஸ்லிம்கள் வந்தேறிகளாகவே உள்ளனர். முஸ்லிம்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் அல்ல எனும் விஷமக் கருத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் நிறுவுகின்ற வகையில் தொடர்ச்சியாக காட்சிகள் அமைக்கப்படுகின்றன.

தமிழ் சினிமாவில் தோன்றும் முஸ்லிம்கள் தமிழுக்கு அறவே தொடர்பில்லாதவர்களாக சித்தரிக்கப் படுகின்றனர். கழுத்தில் தாயத்தும், தலையில் தொப்பியும், லுங்கியும் அணிந்து, கையில் கத்தியுடன் கசாப்புக் கடைகாரனாகவோ, பச்சைத் தலைப்பாகையுடனும் விகாரமான தோற்றத்துடனும் சாம்பிராணி போடுபவராகவோ காட்சியளிக்கும் முஸ்லிம் 'ஹரே பாய்..நம்பல் கீ' என்றுதான் பேசுகிறார்.

இதுதானா தமிழ் முஸ்லிம்களின் அடையாளம்? இதுவா நமது கலாச்சாரம்? 'நாம் இன்னும் பதிவு செய்யப்படாத சமூகம்' என்று இயக்குநர் அமீர் குறிப்பிட்டதை நாம் என்று உணரப்போகிறோம்.ஆனால், தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் முஸ்லிம்கள் ஆற்றிய அரும்பணி பற்றியும், நடைமுறை வாழ்வில் கூட தமிழை வாழவைத்துக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் குறித்தும் யார் படமெடுப்பது?

'சாதம்' என்று உயர் சாதியினர் பேசுவது போல் அல்லாமல் 'சோறு' என்று நல்ல தமிழில் உச்சரிப்பவர்கள் முஸ்லிம்கள். குழம்பை 'ஆணம்' என்றும் பழையதை 'நீர்ச்சோறு' என்றும் தூய தமிழில் பேசுபவர்கள் முஸ்லிம்கள். சாப்பிட்டாயா என கேட்காமல் 'பசியாறினாயா' என்று கேட்பவர்கள் முஸ்லிம்கள்.
பூஜை புனஸ்காரங்கள் என்று சொல்லாமல் 'தொழுகை' என்று அழகுத் தமிழில் அழைப்பவர்கள் அல்லவா முஸ்லிம்கள். இன்னும் எத்தனை எத்தனை தகவல்கள்? இந்த உண்மைகளை யார் பதிவு செய்வது?

நாம்தானே செய்ய வேண்டும். நமக்குத்தான் நம் வாழ்வியலின் ஆழ அகலம் தெரியும்; வலியும் வேதனையும் புரியும். நமது கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியத்தின் வலிமை தெரியும்.
திரைமொழியைக் கற்றுக் கொண்டால்தான் அதை நம்மால் சாத்தியப்படுத்த முடியும்.

கேரளாவில் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி, அரச பயங்கரவாதத்தினால் தொடர்ச்சியாக வேட்டையாடப்பட்டு வருவதை உலகமே அறியும். அவர் குற்றமற்றவர் என்பதும், அரசியல் சூழ்ச்சிக்கு இரையாகியிருப்பவர் என்பதும் எல்லோரும் அறிந்த ஒன்று. குறிப்பாக, அனாதைக் குழந்தைகளுக்கு மறுவாழ்வு கொடுப்பதற்காக அன்வாருல் உலூம் என்ற பெயரில், 'அன்வார்சேரி' எனும் ஊரில் மிகப்பெரும் கல்விச்சாலையை நிறுவிய மனிதநேயர் அவர் என்பது, கேரள மக்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.

ஆனால், அதே கேரளாவில்தான் அண்மையில் நடிகர் பிருத்விராஜ் நடித்த 'அன்வர்' என்ற திரைப்படம் வெளியாகி, கேரள முஸ்லிம்களை தீவிரவாதியாகச் சித்தரிக்கும் வேலையை மிகக் கூர்மையாக செய்து முடித்திருக்கிறது.
'அன்வர்' என்ற படத் தலைப்பு, மதானியின் கலாசாலையான அன்வாருல் உலூமை குறிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

இத்தனை மோசமான சித்தரிப்புகளுக்குப் பிறகும் நாம் சினிமாவை மீளாய்வு செய்யாமல் பொத்தாம் பொதுவாக, 'ஹராம்' என்று ஒதுக்கி வைத்தால் மீள முடியாத இழப்புகளுக்கு நாம் ஆளாகுவோம்.

எப்படி ஒரு காலத்தில் நாம் தொலைக்காட்சியை 'ஹராம்' என்று சொல்லி ஒதுக்கி வைத்துவிட்டு,
பின்னர் உலக அளவில் இஸ்லாமிய அறிஞர்கள் தொலைக்காட்சி மூலம் கருத்துருவாக்கம் செய்யத் தொடங்கிய பின்னர், தாமதமாகப் புரிந்து கொண்டு தொலைக்காட்சியைப் பயன்படுத்தத் தொடங்கினோமோ, அதேதான் இப்போது சினிமா விசயத்திலும் நமது நிலைப்பாடு.

இன்னும் கொஞ்ச காலத்தில் சினிமா இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் வந்த பிறகு, இப்போதே வந்து விட்டது. வேறு வழியே இல்லாமல் அதை எப்படி பயன்படுத்துவது என்று நாம் பரிசீலனையில் இறங்குவோம்; சோதனை முயற்சிகளில் ஈடு படுவோம். அப்போது சினிமா எங்கேயோ போயிருக்கும். அதன் தொழில்நுட்பம் கட்டற்ற வளர்ச்சியை அடைந்திருக்கும்.
அதன் எந்த அம்சத்தையும் நாம் விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு பரிணாமம் பெற்று நாம் தொடவே முடியாத உயரத்தில் நிற்கும். அப்போதுதான் நாம் சினிமா பற்றி 'ஏபிசிடி' கற்கத் தொடங்குவோம். அதுதானே நமது வழக்கம். தொலைக்காட்சி விசயத்தில் அதுதானே நடந்தது.

'கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்' என்பது போல், தொலைக்காட்சியை காலம் தாழ்த்திப் பயன்படுத்தத் தொடங்கியதால் தானே அதன் வளர்ச்சிக்கு நம்மால் இன்றைக்கு வரை ஈடுகொடுக்க முடியவில்லை. தொலைக்காட்சியின் தொழில்நுட்ப மொழி புரியாமல் அதில் நாம் அடித்து வரும் கூத்துக்கள் பற்றி நான் பலமுறை விரிவாக எழுதியுள்ளேன்.

எல்லா தொழில்நுட்பங்களையும், அறிவியல் வளர்ச்சியையும் 'ஹராம்! ஹராம்!' என்று சகட்டு மேனிக்கு ஒதுக்கித் தள்ளியதால் ஏற்பட்ட இழப்புகளை நாம் இன்று வரை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். தொழில்நுட்பங்களைப் புறந்தள்ளத் தொடங்கிய நாள் முதல் நாம் வலிமை இழக்கத் தொடங்கினோம்.

நம்முடைய சாம்ராஜ்ஜியங்களை இழந்தோம்; நம்முடைய பேரரசுகள் வீழ்ந்தன; நம்முடைய நிலப்பரப்புகள் எளிதில் எதிரிகளின் சூறையாடலுக்கு இலக்காகின; நம்முடைய வளங்கள் கொள்ளையடிக்கப் பட்டன; நமது கடந்தகால வரலாறுகள் திரிக்கப்பட்டன; நம்முடைய ஆவணங்களும், அருங்காட்சியகங்களும் அழிக்கப்பட்டன; நம்முடைய வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டன; ஆதிக்க சக்திகளிடம் கை கட்டி நிற்க வேண்டிய நிலைக்கு நாம் ஆளானோம்; வீரம் செறிந்த ஆளுமைகள் வீழ்த்தப்பட்டு போலிகளும், பொம்மைகளும், கைப்பாவைகளும் அதிகாரத்தில் அமர்த்தப் பட்டார்கள்.

அறிவியலையும், வரலாற்றையும், தொழில்நுட்பத்தையும், நவீன உத்திகளையும் நாம் கையாண்ட காலம் வரை நாம் தான் உயர்ந்து நின்றோம். நாம்தான் மதிக்கப்பட்டோம், நாம் தான் முன்மாதிரியாக இருந்தோம். அந்த வரலாறுகளை நாம் மறுவாசிப்பு செய்ய வேண்டிய நேரம் இது.

நடிகையின் கவர்ச்சிப் படங்களுடன் வெளிவருவதனாலேயே, நாம் நாளிதழ்கள், வார இதழ்களைப் புறக்கணிப்பதில்லை.

எல்லா சீரழிவுகளையும் ஒன்று திரட்டித் தருவதனாலேயே, நாம் இணைய தளத்தை நிராகரிப்பதில்லை.

முறைகேடான உறவு முறைகளை போதிக்கும் தொடர்கள் வருவதனாலேயே, நாம் தொலைக்காட்சி இணைப்பை துண்டித்து விடுவதில்லை.

ஒழுக்கக் கேட்டிற்கு எளிதாக வழியமைக்கிறது என்பதனாலேயே, நாம் செல்போனை தூர எறிவதில்லை.

நாளிதழ்களும், தொலைக்காட்சியும் , இணையதளமும், செல்போனும் தொழில்நுட்பம் வழங்கிய கொடை. இவை அனைத்திலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கின்றன. எனினும் அவற்றிலிருந்து நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ளும் அறிவையும் பக்குவத்தையும் நாம் பெற்றிருக்கிறோம்.

ஆனால், அவைகளை விடவும் பல மடங்கு வலிமை வாய்ந்த உயரிய தொழில்நுட்பமான சினிமாவை மட்டும் நாம் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கிறோம்.

இஸ்லாம் எதையுமே கண்ணை மூடிக் கொண்டு 'ஹராம்' என்று சொல்லியதில்லை. இஸ்லாம் ஒன்றை ஹராம் என்று தடுத்தால் அதற்கு மாற்றாக வேறொரு ஹலாலான வழிமுறையை சொல்லியிருக்கிறது.
வட்டியை ஹராம் என்று சொல்லும் இஸ்லாம், 'வட்டியில்லா வங்கி' முறையை ஹலாலாக்கி இருக்கிறது. நாம் சினிமாவை 'ஹராம்' என்கிறோம். அப்படியென்றால் அதற்கு மாற்று?

ஒரு பலம் பொருந்திய ஊடகத்தை மிக எளிதாக ஹராம் என்று நிராகரிக்கத் தெரிந்த நமக்கு,
அதே அளவு பலம் மிகுந்த ஒரு மாற்று ஊடகத்தை உருவாக்க முடிந்ததா?

இன்றைய வணிக சினிமாவிலிருந்து முரண்படும் இடது சாரிகள், தங்களின் கருத்துக்களை வெகுமக்களிடம் பரப்புவதற்காக 'முற்போக்குக் கலை' என்னும் கலை வடிவத்தை உருவாக்கி வைத்துள்ளனர்.

வைரமுத்து சொன்னதைப் போல பூட்டுகளே கதவுகளாகத் தொங்கும் கோடம்பாக்கத்தில், நுழைய முடியாத ஒடுக்கப் பட்ட தலித் மக்கள், தங்களின் வாழ்வியலை வெகுமக்களுக்குச் சொல்ல 'தலித் கலை' என்னும் கலை வடிவத்தை உருவாக்கி வைத்துள்ளனர்.

நாம் என்ன கலை வடிவத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம்?

சினிமா, தொலைக்காட்சி, பத்திரிகை, இணையம் என ஊடகத்தின் அத்தனை வகை பரிணாமங்களிலும் உயர்சாதியினரே கோலோச்சியுள்ளனர். எவராலும் அவ்வளவு எளிதில் அசைக்க முடியாத பலமிக்க சக்திகளாய் அவர்களே நிலைகொண்டுள்ளனர். ஆனாலும், அந்தப் பெருமிதத்தோடு அவர்கள் நிறைவடைந்து விடவில்லை. நாளுக்கு நாள் கலைஞர்களை உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறார்கள்.
டிசம்பர் மாதம் முழுவதும் மியூசிக் அகாடமி நிரம்பி வழிகிறது. சென்னையின் எல்லா சபாக்களும் கச்சேரிகளால் களை கட்டுகின்றன. கலாஷேத்ராவில் கலைஞர்களை வார்த்தெடுக்கும் பட்டறை நிரந்தரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் பட்டறைகளிலிருந்து வெளியே வரும் உயர்சாதி கலைஞர்கள்தான், இந்திய நாட்டின் உயரிய விருதுகளான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷனுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.

நாம், கலைஞர்களை தேர்வு செய்யும் இடத்திலும் இல்லை; கலைஞர்களாகவும் இல்லை.
நம்மிடம் கலைஞர்களை உருவாக்கும் பட்டறைகளும் இல்லை, கலைகளைப் பற்றிய உருப்படியான புரிதலோ, தெளிவான பார்வையோ இல்லை.

லிபியாவில் நடந்த விடுதலைப் போராட்டத்தை சித்தரிக்கும் 'ஒமர் முக்தார்' திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வு இன்று வரை நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. அந்தப் படம் ஏற்படுத்திய தாக்கத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அத்திரைப்படம் வந்தக் காலத்தில் பிறந்த ஆண் குழந்தைகள் எல்லாம் 'ஒமர் முக்தார்'கள் ஆனார்கள்.
லிபியாவின் போராட்ட வரலாற்றை புத்தகமாக்கிக் கொடுத்திருந்தால், படிக்கும் பழக்கமற்ற நம் சமூக அமைப்பில் அது எந்த, பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்காது. காட்சி வடிவில் படமாக்கிக் கொடுத்ததனால்தான் அது அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைந்தது. இது தான் அச்சு ஊடகத்திற்கும், காட்சி ஊடகத்திற்கும் இடையே உள்ள மிகப்பெரும் வேறுபாடு.
காட்சி ஊடகத்திற்கே உரிய தனிப்பெரும் சிறப்பு.

இறுதியாக இயக்குநர் சீமானின் வார்த்தைகளைச் சொல்லி முடிக்கிறேன்.

'' ஈரான், பிரான்ஸ் போன்ற உலக நாடுகள் அனைத்தும் திரைப்படங்கிற வலிமை மிகுந்த ஊடகத்தை போர்க்கருவியா பயன்படுத்தி சமூக அவலங்களை வெளிச்சம் போட்டு காட்டுறாங்க. நாம மட்டும்தான் அதை கண்ணு வழியே போதையேத்துற விபச்சார விடுதி, சாராயக்கடை மாதிரி பார்க்கறோம். காரணம் கேட்டால் ஒரே வார்த்தையில் அது பொழுது போக்குன்னு சொல்லிடுறான். இந்தியா மாதிரி நாட்டுக்கு என்ன பொழுது போக்கு வேண்டிக் கிடக்கு? பொழுதை ஏன் போக்கணும், பேசாம இருந்தா அது பாட்டுக்கு போயிடாதா? அந்தப் பொழுதை மிக நல்லப் பொழுதாக எப்படி மாத்துறதுங்கிறதைப் பத்திதான் இனி நாம யோசிக்கணும்''

இது, சீமானின் வார்த்தை மட்டுமல்ல..,
இனி நம் வாழ்க்கையும் கூட!


[சமநிலைச் சமுதாயம் ஜனவரி - 2011 இதழில், ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரை.]

தடுமாறும் சீமான்..தடம் மாறும் நாம் தமிழர்!

சீமான்...

பெரியாரின் பேரன்; பிரபாகரனின் தம்பி; பகுத்தறிவுக் கருத்தாளர்; தமிழ்த்தேசிய உணர்வாளர் என்ற வகையில் அடையாளப் பட்டிருப்பவர்.

ஈழ மண்ணின் விடுதலைக்காக ஒலிக்கும் குரலாகவும்,
ஈழ மக்களின் கண்ணீரைத் துடைக்கும் விரலாகவும் காட்சியளிப்பவர்.

எளிய குடும்பத்திலிருந்து எழுந்து வந்திருக்கும் ஓர் திரைக் கலைஞர்.
எளியவர்கள் பலர் திரைத்துறையில் எழுச்சி பெறுவதற்கு காரணமானவர்.

தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக சிறைகளைக் கண்டவர்.
தன் இனத்தின் மீட்சிக்காக அடக்குமுறைகளை எதிர் கொண்டவர்.

பிற மொழி கலப்பில்லாத தூய தமிழ் உச்சரிப்பும்,
பிறர் மொழியைக் களங்கப்படுத்தாத உயர்பண்பும் உடையவர்.

தான் உச்சரிக்கும் மொழியாலும், தன் உடல் மொழியாலும்
தமிழுலகை வசீகரிக்கும் மேடை நாயகர்.

இத்தனைப் பெருமைகளையும், சிறப்புகளையும் உடைய சீமான், இப்போது 'இந்தியாவின் மரண வியாபாரி' நரேந்திர மோடியைப் புகழும் ஒரு நாலாந்திர அரசியல் வாதியாகச் சிறுமைப்பட்டு நிற்கிறார்.

2011 சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரசை வேரறுப்பேன் என்று முழங்கிக் கிளம்பிய சீமான், காங்கிரசின் தமிழின விரோத நடவடிக்கைகளை பட்டியலிட்டதோடு, கலைஞரின் தலைமையிலான திமுக அரசையும் ஒரு பிடிபிடித்தார். 'கலைஞரை விமர்சிக்கிறேன் பேர்வழி' என்று கிளம்பியவர் அத்தோடு நிறுத்தியிருந்தால் பிரச்சனையில்லை. நரேந்திர மோடிக்கு நற்சான்று கொடுத்ததைத் தான் எவராலும் ஜீரணிக்க முடியவில்லை.

நரேந்திர மோடி...
ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்றொழித்தவன்; பிணக்குவியல்களின் மீதேறி பதவியேற்றுக் கொண்டவன்.

ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பெண்களைக் கொடூரமாகக் குதறிய சிங்களப் படைகளுக்கு தலைமையேற்ற ராசபக்சேவைப் போலவே, குஜராத்தில் ஒடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம் பெண்களை சிதைத்துச் சீரழித்த இந்துத்துவப் படைகளுக்குத் தலைமை ஏற்றவன்.

இன்று இந்தியாவைத் தாண்டி எந்த மண்ணிலும் கால்வைக்க முடியாத அளவுக்கு, உலக நாடுகளால் துரத்தியடிக்கப்படும் கறைபடிந்த கரங்களுக்குச் சொந்தக்காரன். அவன் வந்தாலே கேவலம் என உலகம் அவனை காறி உமிழ்கிறபோது, பெரியாரின் மண்ணிலிருந்து ஒருவர் அவனை முன்மாதிரியாகக் காட்டுவது எத்தனைப் பெரிய துரோகம்?

குஜராத்தில் தடையில்லா மின்சாரமும், ஊழலில்லா நிர்வாகமும் கிடைக்கிறதாம். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இலவசங்களை அறிவித்து மக்களை பிச்சைக்காரர் ஆக்கவில்லையாம். மோடி அந்த மண்ணுக்கும், மக்களுக்கும் விசுவாசமாக இருக்கிறாராம். இப்படி அடிக்கிக்கொண்டே போகிறார் சீமான்.

இத்தோடு நிறுத்தவில்லை அவர். 'அதிமுக ஆட்சியமைத்தால் அது எப்படியிருக்கும்? என்று ஒரு ஊடகவியலாளர் அவரிடம் கேள்வி எழுப்பிய போது, 'திமுக ஆட்சியைவிட மோசமாகக் கூட இருக்கலாம்; அல்லது நரேந்திர மோடி மாதிரி ஒரு நல்ல நிர்வாகத்தைத் தரவும் ஜெயலலிதா முயற்சிக்கலாம்'. என்று பதிலளித்துள்ளார் சீமான்.

ஐயா பெரியாரின் பேரனே..எது நல்ல நிர்வாகம்?

ஈழத்தில் முள்வேலி முகாம்களுக்குள் தமிழ் மக்கள் அடைபட்டு வதைபடுவதைப் போல, குஜராத் மண்ணின் சொந்த மக்களான முஸ்லிம்களை இன்றைக்கும் அகதி முகாம்களுக்குள் அல்லல்பட வைத்திருக்கிறானே நரேந்திர மோடி. அவன் நிர்வாகமா நல்ல நிர்வாகம்?

தடையில்லா மின்சாரமும், ஊழலில்லா நிர்வாகமும் மட்டும்தான் ஒரு நல்லாட்சிக்கான அடையாளமா? அப்படியெனில் சொந்த மக்களை அகதி முகாம்களில் அவல வாழ்க்கை வாழ வைத்திருப்பதை எந்தக் கணக்கில் சேர்ப்பது?

ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைப் படுகொலை செய்த இந்துத்துவ மதவெறியர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பவைத்த மோடியின் நிர்வாக ஆற்றலை என்னவென்று சொல்வது?

அதிகார மட்டம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் காரர்களை தேடிப்பிடித்து பதவியிலமர்த்தும் மோடியின் நிர்வாக ஒழுங்கை என்ன சொல்லி அழைப்பது?

'தடையில்லா மின்சாரமும், ஊழலில்லா நிர்வாகமும் உள்ள குஜராத்' என மோடியை வானளாவப் புகழும் சீமானுக்கு, அந்த குஜராத்தின் உண்மை முகம் தெரியுமா? மோடி முன்னெடுக்கும் வளர்ச்சித் திட்டங்களின் அசல் பங்கங்கள் அவருக்குப் புரியுமா? ’வைப்ரண்ட் குஜராத்’ திட்டத்தின் பெயரிலான வளர்ச்சியின் ஆதாயம் முழுக்க இந்துக்களுக்கு மட்டும்தான் எனவும், குஜராத்தில் வாழும் முஸ்லிம்கள் பல்வேறு வகையில் பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும் அவுட்லுக் வார இதழ் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதை சீமான் அறிவாரா?

குஜராத்தில் நகரங்களில் பட்டினியால் வாடும் முஸ்லிம்களின் நிலைமை இந்துக்களை விட 800 மடங்கு அதிகமாக இருப்பதாகவும், ஒ.பி.சி பிரிவினரைவிட இது 50 சதவீதம் அதிகம் என்றும், கிராமங்களில் பட்டினியால் வாடும் முஸ்லிம்களின் நிலைமை இந்துக்களை விட 200 மடங்கு அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. குஜராத்தில் 60 சதவீத முஸ்லிம்கள் நகரங்களில் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் மாணவர்களிடையே, குறிப்பாக மாணவிகளில் பள்ளிக்கூட படிப்பை இடையில் நிறுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், முஸ்லிம்களுக்கும் இதர சிறுபான்மையின மாணவர்களுக்காகவும் மத்திய அரசு கல்வி உதவித்தொகை அறிவித்த போது, குஜராத் அரசு அதனை நடைமுறைப்படுத்த மறுத்துவிட்டது என்றும், இதனால் ஆண்டுதோறும் 60 ஆயிரம் சிறுபான்மை சமூக மாணவர்கள் கல்வி உதவித்தொகையை இழந்து வருவதாகவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

வளர்ச்சியின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்ட குஜராத் தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களில் பெரும்பாலோர் இந்துக்கள் என்றும், அங்குள்ள முஸ்லிம்கள் பீடி சுற்றுதல், துடைப்பம் தயாரித்தல், பட்டம் தயாரித்தல்,அகர்பத்தி தயாரித்தல், கை ரிக்‌ஷா இழுத்தல் போன்ற குறைந்த வருமானங்களைத் தரக் கூடிய சுய தொழில்களைச் செய்யும் விளிம்பு நிலை மக்களாக இருப்பதையும் அந்த ஆய்வறிக்கை அம்பலப்படுத்துகிறது.

குஜராத் முஸ்லிம்களுக்கு உயர் கல்வியிலோ தொழில் துறையிலோ இடஒதுக்கீடு இல்லை. குஜராத்தில் முஸ்லிம்களின் வங்கிக் கணக்கில் பங்கு 12 சதவீதமாகும். வங்கிக் கணக்கில் 89 சதவீத பங்கும் இந்துக்களுடையதாகும். மொத்தமாக விநியோகம் செய்யப்பட்டுள்ள வங்கிக் கடனில் 97 சதவீதமும் இந்துக்களுக்கே கிடைத்துள்ளது. இதுவும் அந்த ஆய்வு கூறும் உண்மையாகும்.

குஜராத்தில் மிக அதிகமான வழிப்பறிக் கொள்ளைக்கும்,வீடுகளில் திருட்டுக்கும் பாதிக்கப்படுவது முஸ்லிம்களே என்றும், பள்ளிக்கூடங்களில் முஸ்லிம் மாணவர்கள் படிக்க அனுமதி கிடைப்பது கடினம் என்றும், முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் போக்குவரத்து நன்றாக இல்லை என்றும், பள்ளிக்கூடங்களும் மருத்துவமனைகளும் இல்லை என்றும் அடுக்கடுக்கான தகவல்களைக் கூறி அதிர்ச்சியூட்டுகிறது அவுட்லுக்கின் அறிக்கை.

இப்போது சொல்லுங்கள் சீமான் அவர்களே! இப்படி சொந்த மக்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்தும் மோடியின் ஆட்சி நல்லாட்சியா?

மோடியின் கரங்களில் படிந்திருக்கும் இரத்தக் கறையை அகற்றவும், மோடியின் குறியீடாகப் பரவியிருக்கும் மதவெறியன் முத்திரையை அழிக்கவும், தொடர் முயற்சிகளை செய்து வருகின்றனர் இந்துத்துவ சக்திகள். மோடி இந்தியாவிலேயே சிறந்து விளங்கும் முன்மாதிரி முதல்வர் என்ற தோற்றத்தை வலிந்து ஏற்படுத்தி வருகின்றனர். அதற்காகவே இந்துத்துவச் சார்புள்ள கார்ப்பரேட் முதலாளிகளின் துணையுடன், குஜராத்தில் அதிகமதிகம் தொழில் முதலீடுகளைக் குவியச் செய்து, மோடியின் நிர்வாகத்தை தாங்கிப் பிடிக்கின்றனர். மோடியின் நிர்வாக அசைவுகள் ஒவ்வொன்றையும் 'செய்தி'யாக்குகின்றனர்.

நாடு முழுவதும் மோடியின் புகழைப் பரப்பும் கருத்தியலாளர்களைக் கொண்டு பொதுக்கருத்தை உருவாக்குகின்றனர். தமிழகத்தில் அந்த வேலைக்கான மொத்தக் குத்தகையையும் 'துக்ளக் சோ' எடுத்துள்ளார். அவர் செல்லுமிடமெல்லாம் மோடியின் புகழ் பாடித் திரிகிறார். கலைஞரைத் திட்டுவதற்கும், ஜெயலலிதாவை தட்டி எழுப்புவதற்கும் மோடியை முன்னுதாரணமாகக் காட்டுகிறார்.

'ஜெயலலிதா வந்தால் நரேந்திர மோடியைப் போல நல்லாட்சி தருவார்' என்று, இத்தனை நாளும் சோ சொல்லி வந்ததைத்தான் இப்போது சீமானும் சொல்லி வருகிறார். அந்த வகையில் இந்துத்துவ சக்திகள் வெற்றி பெற்று விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இனி மோடியின் குஜராத்தை இந்தியாவின் சிறந்த மாநிலமாகக் காட்டுவதற்கு இல.கணேசனும், எச்.ராஜாவும், பொன்.ராதாகிருஷ்ணனும், சோவும், இராம.கோபாலனும் சீமானின் கருத்தை உதாரணமாகக் காட்டுவார்கள். 'மோடி நல்லவர் என்று நாங்கள் சொல்வதை நீங்கள் நம்பவில்லை; இதோ பெரியாரின் பேரனே சொல்கிறார் பாருங்கள்' என்று மக்களை உசுப்புவார்கள்.

'இலங்கையில் சர்வதேசத் திரைப்பட விழாவை நடத்தி, அதன் மூலம் உலகக் கலைஞர்களை இலங்கைக்கு வருத்தி, உலக அரங்கில் இலங்கை மீது நல்லெண்ணத்தை ஏற்படுத்த ராசபக்சே முயல்கிறார். ஆகவே இந்திய திரைக் கலைஞர்களே இலங்கைக்கு செல்லாதீர்கள். ராசபக்சே மீதான போர்க் குற்றத்தை போக்கத் துணை போகாதீர்கள்' என்றெல்லாம் கொந்தளித்து, கமலுக்கு கடிதம் எழுதி, அமிதாப் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சீமான் தான் இன்று மோடியைப் புகழ்ந்து தள்ளுகிறார்.

திரைப்பட விழா மூலம் தன் மீதான ரத்தக் கறையை மறைக்க முயன்ற ராசபக்சேவைப் போலத்தான், மோடியும் தடையில்லா மின்சாரம் மூலமும், மதுவிலக்குச் சட்டத்தின் மூலமும் தன் மீதான ரத்தக்கறையை மறைக்க முயல்கிறார். அதற்கு சீமான் துணை போகலாமா?

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், சிங்கள அரசுக்கு ஆதரவாகவும் சில தமிழ் முஸ்லிம்கள் செயல்பட்டார்கள் என்று சொல்லி வேதனையடையும் சீமான், தனது மோடி ஆதரவுப் பேச்சால், ஈழத்தை ஆதரிக்கும் தமிழக முஸ்லிம்கள் வேதனையடைவார்களே என்று ஏன் சிந்திக்க வில்லை?
ஈழத்து முஸ்லிம்களை அடித்துத் துரத்திய விடுதலைப் புலிகளின் துரோகத்தைக் கூட மறந்து விட்டு, தமிழகத்தில் உள்ள தமுமுக போன்ற முஸ்லிம் அமைப்புகள் சிங்கள அரசுக்கு எதிராக தீர்மானம் போட்டதும், போர் நிறுத்தம் கோரிய போராட்டங்களில் பங்கேற்றதும் அண்மைக்கால சான்றுகள். தமிழ் மண்ணுக்கும், தமிழ்த் தேசியத்திற்கும் முஸ்லிம்கள் விசுவாசமானவர்கள் என்பதற்கு சீமானின் அருகிலிருக்கும் 'தமிழ் முழக்கம் சாகுல் அமீது'வே நிகழ்கால சான்று. அத்தகைய விசுவாசமுள்ள முஸ்லிம்களின் மனநிலை, சீமான் மோடியைப் புகழும் போது எப்படி இருந்திருக்கும் என்பதை அவர் எண்ணிப்பார்க்க வேண்டாமா?

'மோடி அந்த மண்ணுக்கும், மக்களுக்கும் உண்மையான தலைவன்' என்கிறார் சீமான். ஏன் ராசபக்சே கூட அந்த மண்ணுக்கும், மக்களுக்கும் உண்மையான தலைவன்தான். சிங்களர்களின் மேன்மைக்காகவே அவன் பல திட்டங்களை செயல்படுத்துகிறான். மோடியைப் போலவே பன்னாட்டு முதலீடுகளை இலங்கையை நோக்கித் திருப்புகிறான். அதற்காக ராசபக்சேயை 'நல்லாட்சி தருபவர்' என்று பாராட்ட முடியுமா? அப்படி பாராட்டினால் சீமான் சும்மா இருப்பாரா?

ராசபக்சேயை தமது நண்பர் என்று சொல்லி புகழ்ந்து பேசியதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹசன் அலி மீது பாய்ந்து வருகிறார் சீமான். ஹசன் அலி ராசபக்சேயைப் புகழ்ந்ததில் வியப்பேதுமில்லை. ஏனெனில், அவர் ராசபக்சேவுடன் தொழில் ரீதியாக தொடர்பில் இருப்பவர். ராசபக்சேவுக்கு நெருக்கமான காங்கிரஸ் தலைமையின் கீழ் இயங்குபவர்.

அதிகாரத்தில் இருக்கும் அவர் தன் அதிகாரத்தை தக்க வைப்பதற்காகத்தான் ராசபக்சேவை புகழ்ந்து வருகிறார் என்பதை பாமரனால் கூட புரிந்து கொள்ள முடியும். ஆனால், அதிகாரத்தின் வாசனையைக் கூட நுகராத சீமான் மோடியை புகழ்ந்து பேசியதன் பின்னணியைத் தான் எவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.

அதிகாரத்தில் இல்லாத போதே சீமான் இப்படி தடுமாறுகிறார் என்றால், ஹசன் அலியைப் போல அதிகாரத்தைச் சுவைக்கும் நிலைக்கு சீமான் வருகிறபோது எப்படி மாறுவாரோ தெரியவில்லை.

சீமானின் பேச்சு சர்ச்சையானவுடன், 'சீமான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை; மோடியின் நிர்வாகத்தில் உள்ள நல்ல விசயங்களை மட்டுமே சுட்டிக் காட்டினார்; சீமான் எப்போதுமே மதவெறி எதிர்ப்பாளர்தான்' என்றெல்லாம் வலிந்து விளக்கம் அளிக்கின்றனர் நாம் தமிழர் இயக்கத்தினர். அவர்களின் வாதப்படியே பார்த்தாலும் நல்ல விசயம் மோடியிடம் மட்டும் இல்லையே. இவர்கள் முழு மூச்சாக எதிர்க்கும் கலைஞரிடம் கூடத்தான் நல்ல பல விசயங்கள் இருக்கிறது. அதற்காக சீமான் கலைஞரைப் பராட்டுவாரா?

மோடியின் மதவெறியைக் கழித்துவிட்டு, அவரது நிர்வாகத்தில் உள்ள தடையில்லா மின்சாரத்தையும், மதுவிலக்குச் சட்டத்தையும் ஊன்றி கவனிக்கத் தெரிந்த சீமானுக்கு, கலைஞரின் குடும்ப ஆதிக்கத்தை கழித்து விட்டு, அவரது நிர்வாகத்தின் கீழ் வழங்கப்பட்ட அருந்ததியர் இட ஒதுக்கீட்டையும், முஸ்லிம் இட ஒதுக்கீட்டையும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சமூக நீதி சட்டத்தையும் கவனிக்கத் தெரியவில்லையே ஏன்?

இத்தகைய நல்ல சட்டங்களை கொண்டு வந்ததால் மட்டுமே சீமானின் பார்வையில், எப்படி கலைஞர் ஒரு முன்மாதிரி முதல்வர் ஆகமாட்டாரோ, அதைப் போலவே சில நிர்வாக நடவடிக்கைகளால் மட்டுமே மோடியும் முன்மாதிரி முதல்வர் ஆகிவிடமாட்டார். இந்த உண்மைகளெல்லாம் நன்றாகத் தெரிந்தும் கூட சீமான் ஒரு முடிவோடு இயங்கிக் கொண்டிருக்கிறார்.

பால்தாக்கரேயில் தொடங்கிய சீமானின் பயணம், இப்போது மோடியில் தொடர்கிறது. அனேகமாக அது நாக்பூரிலுள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் போய் முடியும்போல் தெரிகிறது.

சீ
மான் தெளிவற்ற அரசியல் செய்து கொண்டிருக்கிறார் என்பதை அவரது பேச்சும், நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக இனம்காட்டி வருகின்றன.
'வீரநடை' திரைப்படத்தின் படுதோல்விக்குப் பிறகு, முடங்கிக் கிடந்த சீமானை பெரியார் திராவிடர் கழகத்தின் மேடைகள்தான் இயல்பு நிலைக்கு கொண்டுவந்தன. அந்த மேடைகளில் பேசுவதற்காக பெரியாரையும், அவரது தத்துவங்களையும் ஆழ்ந்து உள்வாங்கிய அவரை, சுப.வீரபாண்டியன், தியாகு, பெ.மணியரசன், திருமாவளன், ராமதாஸ், கி.வீரமணி போன்ற பெரியாரியவாதிகள் ஆரத்தழுவி வரவேற்றனர்.

பெரியாரியவாதிகளால் வளர்த்தெடுக்கப்பட்ட சீமான், வளர்ந்த உடன் செய்த முதல் வேலை, பெரியாரின் திராவிடத்தை மறுத்தார். பெரியாரின் மொழிக் கொள்கையை எதிர்த்தார். தன் இறுதி மூச்சுள்ளவரை இந்துத்துவத்திற்கு எதிராகக் களமாடிய பெரியாரின் வழியைத் தவிர்த்தார். சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என்று முழங்கிய பெரியாரை மறந்தார்.

சீமான் இப்போது திராவிடத்தைப் பேசுவதில்லை; பெரியாரியத்தைப் பரப்புவதில்லை; இந்துத்துவத்தை தோலுரிப்பதில்லை; சாதி ஒழிப்பு பற்றி மூச்சு விடுவதில்லை. மாறாக, ஆரியத்தை வேரோடு வீழ்த்திய திராவிடத்தை எதிர்க்கிறார். மும்பையில் பல்லாயிரம் முஸ்லிம்களைப் படுகொலை செய்த பால்தாக்கரேயையும், குஜராத்தில் அதைவிட மேலான பயங்கரத்தை நிகழ்த்திய நரேந்திர மோடியையும் புகழ்ந்துரைக்கிறார். இந்துத்துவச் சிந்தனை கொண்ட சாதி வெறியரான முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் ஒரு சராசரி அரசியல்வாதியாக காட்சி தருகிறார். கேட்டால் தமிழ்த் தேசியம்; தமிழ்த் தேசியம் என்கிறார்.

சீமான் பேசுகிற தமிழ்த் தேசியம், மோடியின் இந்துத்துவ தேசியம் போல ஆபத்தானதாக இருக்கிறது.

தமிழராய் பிறந்து, தமிழராய் வாழும் மக்கள் பல்வேறு சமூகக் குழுக்களாக இருக்கிறார்கள். அந்தந்த சமூகக் குழுக்களுக்கென்று தனித் தனியான அடையாளங்களும், கலாச்சார நடவடிக்கைகளும், பண்பாட்டு அசைவுகளும், வட்டார வழக்குகளும் உள்ளன. அதையெல்லாம் மறுத்துவிட்டு ஒரு தேசியத்தை கட்டமைக்க சீமான் முயல்கிறார்.

அந்தந்த சமூகங்களுக்கான உரிமைகளைப் பற்றி பேசாமல், அவர்களின் உணர்வுகளுக்கும், அபிலாசைகளுக்கும் மதிப்பளிக்காமல், 'பாட்டன் சொத்து அடமானத்திலிருக்கிறது; மீட்ட பிறகு பேசுவோம்' என்று சீமான் சொல்லித் திரிவது சிறுபிள்ளைத் தனமானது. இது, 'நாடு அடைந்த பிறகு தலித் மக்களுக்கான உரிமைகளைப் பற்றி பேசுவோம்' என்று சொல்லி அம்பேத்கரை ஏமாற்றிய காங்கிரஸ் உயர்சாதியினரின் துரோகத்தைப் போன்றது.

சீமான் தமிழ்த் தேசியத்தைப் பற்றி பொத்தாம் பொதுவாகப் பேசுகிறாரே தவிர, தமிழ்த் தேசியத்தின் உட்பிரிவுகளாய் இருக்கின்ற தலித்துகளின் பிரச்சனைகளையும், சிறுபான்மையினரான கிறிஸ்தவ- முஸ்லிம்களின் பிரச்சனைகளையும், இதர தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பிரச்சனைகளையும் பற்றி அவர் வாயே திறப்பதில்லை. விளிம்பு நிலை மக்களாக இருக்கும் அந்தத் தமிழர்களின் வாழ்நிலை பற்றி அவருக்குப் போதிய புரிதல் இல்லை.

சீமான் எடுக்கும் அரசியல் முடிவுகளும் குழப்பமானதாகவே இருக்கிறது. பிரபாகரனை வீழ்த்த இலங்கை அரசுக்கு கருவிகள் கொடுத்த காங்கிரஸ் அரசையும், அந்த அரசுக்குத் துணை நின்ற கலைஞர் அரசையும் காய்ச்சி எடுத்தவர், 'பிரபாகரனைப் பிடித்து வந்து தூக்கிலிட வேண்டும்' என்று சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய, ஜெயலலிதாவையும் காய்ச்சி எடுத்திருக்க வேண்டும்.

ஆனால், காங்கிரசையும், கலைஞரையும் எதிர்த்த அவர் ஜெயலலிதாவை எதிர்க்கவில்லை. எதிர்க்காவிட்டாலும் பரவாயில்லை; ஆதரிக்காமலாவது இருந்திருக்கலாம். அவரோ 'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என்று சொல்லி ஈழ விடுதலைக்கு புது வழியைக் காட்டினார். 2009 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ஈழம் என்ற வார்த்தையைக் கூட ஜெயலலிதா உச்சரிப்பதில்லை என்பது தனிக் கதை.

2011 சட்டப் பேரவைத் தேர்தலில் கூட அதிமுக அணிக்கு ஆதரவு என்ற போக்கையே சீமான் கடைபிடித்தார். ஆனாலும் அவரைக் கண்டு கொள்ளவோ, மரியாதை நிமித்தமாக சந்திக்கவோ கூட ஜெயலலிதா இடம் கொடுக்கவில்லை. பின்னர் அதிமுக அணியில் வைகோவுக்கு ஏற்பட்ட கதி சீமானின் நிலைப்பாட்டை மேலும் சிக்கலாக்கியது. வம்பே வேண்டாம் எனக்கருதி, காங்கிரஸ் எதிர்ப்போடு தன் தேர்தல் கடமையை முடித்துக் கொண்டார். அதனால் தான் இம்முறை அவர், இலை மலர்ந்தால் அது மலரும், இது மலரும் என்று எந்த ஆரூடமும் சொல்லவில்லை.
தமிழ்நாட்டில் இரண்டு வகை தமிழ்த் தேசியவாதிகள் இருக்கிறார்கள். கொளத்தூர் மணி, சுபவீ, தியாகு, இன்குலாப், அறிவுமதி, பெ.மணியரசன், திருமாவளவன், கி.வீரமணி போன்றவர்கள் எந்தக் காலத்திலும் இந்துத்துவத்தோடு சமரசம் செய்து கொள்ளாத தமிழ்த் தேசியவாதிகள். ஆனால், வைகோ போன்ற தமிழ்த் தேசியவாதிகள் இந்துத்துவ எதிர்ப்பில் முனை மழுங்கிப் போனவர்கள்.

முஸ்லிம்கள் என்றால் அவர்களை மதக் கண்ணோட்டத்தோடு அணுகுவது, தலித்துகள் என்றால் அவர்களை சாதிக் கண்ணோட்டத்தோடு அணுகுவது என்ற வகையிலேயே வைகோ போன்றவர்களின் அணுகுமுறை உள்ளது. இந்துத்துவத்தால் ஒடுக்கப்படுகின்ற சமூகங்கள் என்ற வகையில் தலித்துகளையும், முஸ்லிம்களையும் இவர்கள் அணுகுவதில்லை. ஆனால், முதல் வகை தமிழ்த் தேசியவாதிகள் அந்தச் சமூகங்களின் உணர்வுகளை உள்வாங்கியவர்களாகக் களமாடி வருகின்றனர்.

பாஜக வுடன் கூட்டணி வைத்தது மட்டுமின்றி, குஜராத் கலவரம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தின் போது மோடிக்கு ஆதரவாக முழங்கினார் வைகோ. வாஜ்பாயையும், அத்வானியையும் வானளாவப் புகழும் இயல்புடையவராகவும் அவர் இருக்கிறார். இது பற்றி விமர்சனங்கள் எழுந்த போது, 'பெரியாரும் ராஜாஜியும் போலவே நானும் வாஜ்பேயும்' என்று விளக்கம் அளித்தார் வைகோ.

இப்போது பால்தாக்கரேயையும், மோடியையும் சீமான் புகழ்ந்தது குறித்து, நாம் தமிழர் இயக்கத்தினரிடம் கேட்டால் அவர்களும் வைகோவைப் போலவே பதிலளிக்கின்றனர்.

பெரியாருக்கும் ராஜாஜிக்கும் இடையிலான உறவைப் போன்றது தானா, 'வைகோவுக்கும் வாஜ்பேயிக்குமான உறவு; சீமானுக்கும் மோடிக்குமான உறவு' என்பதை பெரியாரிஸ்டுகள் அம்பலப்படுத்த வேண்டும்.
வைகோ, பழ.நெடுமாறன் போன்ற தமிழ்த் தேசியவாதிகள், ஊழலை எதிர்ப்பதிலும், குடும்ப அரசியலை வீழ்த்துவதிலும் காட்டுகிற முனைப்பில் எள் முனையளவு கூட, சாதிவெறியை ஒழிப்பதிலோ மதவெறியை எதிர்ப்பதிலோ காட்டுவதில்லை. மூத்த தமிழ்த் தேசியவாதிகளான வைகோவும், நெடுமாறனும் பயணித்த அதே வழித்தடத்தில்தான் இப்போது, இளைய தமிழ்த் தேசியவாதியான சீமானும் பயணித்து வருகிறார். இப்படியே அவர் போய்க் கொண்டிருந்தால், தமிழக அரசியலில் நெடுமாறனுக்கும், வைகோவுக்கும் ஏற்பட்ட நிலைதான் சீமானுக்கும் ஏற்படும்.

இயக்கம் கட்டவும், புகழ் பெறவும் எது பயன்படுமோ அதையெல்லாம் பயன்படுத்துவது என்ற குறுகிய சிந்தனைக்கு சீமான் உள்ளாகியிருக்கிறார். மும்பையில் 'நாம் தமிழர்' இயக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும், தென் மாவட்டங்களிலிருந்து பிழைப்புக்காகச் சென்ற குறிப்பிட்ட சாதியினர் என்றும், அவர்கள் ஏற்கனவே சிவசேனாவில் அங்கம் வகிப்பவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. அத்தகையவர்கள் 'நாம் தமிழர்' இயக்கத்தில் உற்சாகமாக செயல்பட வேண்டுமெனில், பால்தாக்கரேயை புகழ்ந்துதான் ஆக வேண்டும் என்பதனாலேயே, சீமான் பால்தாக்கரேயை புகழ்ந்தார் என்றும் தெரிய வருகிறது.

சீமானைப் போலவே, மோடியைப் பாராட்டிய அன்னா ஹசாரேயை எதிர்த்து, மூத்த சமூக சேவகர் மேதா பட்கர் இப்படி கூறினார்: ''அன்னா ஹசாரே குஜராத்தில் முஸ்லிம்களைப் படுகொலை செய்த நரேந்திர மோடியை ஊழலற்ற நிர்வாகம் தருகிறார் என பாராட்டுகிறார். மகாராஷ்டிர அரசியலில் சிவசேனா நல்ல கட்சி என இந்துத்துவா வாதத்தை முன்வைக்கிறார். ஊழல் என்பது களவு.அதை விடக் கொடுமையான, ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட உடந்தையாக இருந்த மோடியைப் பாராட்டும் ஹசாரே, எப்படி சிறந்தவர்?''

அன்னா ஹசாரேயை நோக்கிய மேதா பட்கரின் இந்தக் கேள்வி இந்த சீமானுக்கும் பொருந்தும்.

[சமநிலைச் சமுதாயம் மே-2011 இதழில், ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரை.]